இந்தியா

நாளை தேர்தலை சந்திக்கும் மாஞ்சி: இரு தொகுதிகளில் போட்டியிடும் ஒரே வேட்பாளர்

ஆர்.ஷபிமுன்னா

பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதே நாளில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவின் வேட்பாளரான ஜிதன்ராம் மாஞ்சியும் தேர்தலை சந்திக்கிறார்.

பிஹாரில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளின் இரண்டில் போட்டியிடும் ஒரே வேட்பாளராக இருக்கிறார் முன்னாள் முதல் அமைச்சரான மாஞ்சி. இவை இரண்டும் பிஹாரில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதியில் அமைந்த தொகுதிகளான மக்தும்பூர் மற்றும் இமாம்கன்ச் ஆகியன.

இவ்விரண்டிலும், நாளை நடைபெறவிருக்கும் இரண்டாம்கட்ட தேர்தலில் 32 தொகுதிகளுடன் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கடந்தமுறை மக்தும்பூரில் ஆளும் ஐக்கிய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரான மாஞ்சிக்கு இந்தமுறை அங்கு அதிக நம்பிக்கை இல்லை. எனவே, மக்தும்பூரில் இருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள இமாம்கன்ச்சிலும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

பொதுவாகவே நக்சலைட்டுகளின் ஆதரவாளனாக தம்மை காட்டிக் கொள்ளும் மாஞ்சி, அவர்களுக்கு ஆதரவாக பொது இடங்களில் பேசும் வழக்கம் உடையவர். இதற்கும் மேலாக சில மேடைகளில் தானும் ஒரு நக்சலைட்டு தான் என பேசியதும் உண்டு. ஆனால், இங்கு கடந்த 1990 முதல் எம்.எல்.ஏவாக இருப்பவர் சபாநாயகரான உதய் நாராயண் சௌத்ரி. ஐக்கிய ஜனதா தளம் சார்பில் இமாம்கன்ச்சில் போட்டியிடும் உதய் நாராயணும் நக்சலைட்டுகள் ஆதரவாளர் எனக் கருதப்படுகிறார். இவர் சபாநாயாகராக இருந்த போது, முதல் அமைச்சர் பதவியில் இருந்து பதவி இறக்கம் செய்யப்பட்டவர் மாஞ்சி.

இதனால், வழக்கமாக பாஜக போட்டியிடும் இந்த தொகுதியை தம் தேசிய ஜனநாயக கூட்டணியிடம் இருந்து மாஞ்சி பலவந்தமாகப் பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஒருநாள் விட்டு ஒரு நாள் என மாஞ்சி இமாம்கன்சில் பிரச்சாரம் செய்ததுடன் தம் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி வந்தார். எனவே, இங்கு இருவருக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் முதல் அமைச்சராக இருந்தவர் ஜிதன் ராம் மாஞ்சி. மக்களவை தேர்தலில் கிடைத்த தோல்விக்கு பொறுப்பு ஏற்று தம் பதவியை நித்திஷ்குமார் ராஜினாமா செய்தமையால் மாஞ்சிக்கு வாய்ப்பு கிடைத்து இருந்தது. சுமார் 9 மாதங்கள் முதல்வாரக இருந்தவர் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் பதவி இறக்கப்பட்டார் மாஞ்சி. பிறகு, அங்கிருந்து வெளியேறி இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா எனப் புதிய கட்சியை துவக்கினார். மகா தலீத் எனும் சமூகப்பிரிவை சேர்ந்தவரான மாஞ்சிக்கு, தேஜமு சார்பில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாஞ்சியை போல் இரு தொகுதிகளில் கடைசியாக போட்டியிட்டவர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் மனைவியான ராப்ரி தேவி ஆவர்.

SCROLL FOR NEXT