இந்தியாவின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை இதர நாடுகள் பின்பற்றலாம் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
எச் ஐ வி பரவலைத் தடுப்பதற்கான உலகளாவிய தடுப்புக் கூட்டணியின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை இதர நாடுகள் பின்பற்றலாம் என்றும் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்றவாறு அவற்றை அவை மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்றின் போது, எச் ஐ வி நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் விளைந்த நன்மைகளை பாதுகாக்க இந்தியா எடுத்த நடவடிக்கைகளைப் பற்றி டாக்டர் ஹர்ஷ் வர்தன் எடுத்துரைத்தார்.
புதிய தொற்றுகளை குறைப்பதில் சர்வதேச எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் பலனளித்துள்ளதாக அமைச்சர் கூறினார். தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை வசதிகள் ஆகியவை முன்னேறி உள்ளதால் எய்ட்ஸ் நோயால் ஏற்படும் பாதிப்புகளும், இறப்புகளும் குறைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
எச் ஐ வி நோயைத் தடுப்பதற்காக உலகத்துக்கு இந்தியா வழங்கியுள்ள மருந்துகள் எய்ட்ஸ் பெருந்தொற்றை தடுப்பதில் பெரும் பங்காற்றியுள்ளது குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்தன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்தியாவில் பின்பற்றப்பட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இதர நாடுகளில் எச் ஐ வியை கட்டுப்படுத்த மட்டுமில்லாமல், இதர நோய்களை தடுக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.