அர்ஜுன் ராம் மேக்வால் | கோப்புப் படம். 
இந்தியா

அரசியல் காரணங்களுக்காகவே மத்திய அரசின் திட்டங்களை ராஜஸ்தானில் செயல்படுத்தவில்லை: காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு

பிடிஐ

ராஜஸ்தானில் அரசியல் காரணங்களுக்காகவே மத்திய அரசின் திட்டங்களைக் காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ராஜஸ்தானில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நடைபெற உள்ளது. 21 மாவட்டங்களில் இந்த மாத இறுதியில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். இத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து ஜெய்ப்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அர்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது:

''மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களான தீன்தயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜ்னா, ஷியாமா பிரசாத் முகர்ஜி ரர்பன் மிஷன், பிரதமர் வீட்டுவசதி திட்டம் போன்ற திட்டங்களை காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை.

கிராமப்புறங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் அதிகரித்து வருவதாக நினைத்து, மத்திய அரசின் திட்டங்களை ராஜஸ்தான் மாநில அரசு செயல்படுத்தவில்லை.

அரசியல் காரணங்களால் மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு தவறிவிட்டது''.

இவ்வாறு அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் பாஜக தேசியச் செயலாளர் அல்கா குர்ஜார் கூறுகையில், ''நிதி முறைகேடு மற்றும் சச்சரவு காரணமாக ராஜஸ்தான் மாநில அரசு தோல்வியடைந்துள்ளது. இதனால் காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல்களில் கட்சிக்கு வெற்றியைத் தருவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT