இந்தியா

புதிய இந்தியாவைக் கட்டமைப்பதில் அரசியல் சாசனம் கூறும் நெறிகள் அத்தியாவசியமானவை: ராஜ்நாத் சிங்

ஏஎன்ஐ

புதிய இந்தியாவைக் கட்டமைப்பதில் ஒழுக்கத்தையும், ஒற்றுமையையும் கற்பிக்கும் அரசியல் சாசனத்தின் பங்கு மிக முக்கியமானது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் என்சிசி சார்பில் நடத்தப்பட்ட அரசியல் சாசன நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் இன்று உரையாற்றிய ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்தார்.

விழாவில் அவர் மேலும் பேசியதாவது:

''நமது அரசியல் சாசனம் மக்களால், மக்களுக்காகக் கொடுக்கப்பட்டது. அதனால், ஒற்றுமையுடன் வாழ்வதை அது போதிக்கிறது. நீதிமான்களாக வாழ வழிசெய்கிறது. வேற்றுமையில் ஒற்றுமையைத் தாங்கிப் பிடிக்கிறது. சுதந்திரம், சமத்துவம், சமூக நல்லிணக்கம், நல்லெண்ணம் ஆகியவற்றின் அடித்தளமாக உள்ளது.

அரசியல் சாசனத்தின் முன்னுரையில் இடம் பெற்றுள்ள 'நாம்' என்ற வார்த்தையில் அர்த்தம் பொதிந்துள்ளது. அதை நாமும் உணர்ந்து மற்றவர்களும் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும். அந்தப் புரிதலே புதிய இந்தியாவைக் கட்டமைக்க மிகவும் அவசியமானது. புதிய இந்தியாவைக் கட்டமைப்பதில் ஒழுக்கத்தையும், ஒற்றுமையையும் கற்பிக்கும் அரசியல் சாசனத்தின் பங்கு மிக முக்கியமானது

வரும் நவம்பர் 26-ம் தேதி, நாம் 6-வது அரசியல் சாசன தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். இதனையொட்டி, புதிய இந்தியாவின் மக்கள் ஒன்றிணைந்து முன்னேறிச் சென்று சமூக, தேச நலனை மேம்படுத்தும் பணியில் வெற்றி காண நான் வாழ்த்துகிறேன்.

அரசியல் சாசன தினத்தை நாம் கொண்டாடக் காரணம் பாஜக அரசு. 2014-ல், பாஜகவுக்கு நாட்டுக்குச் சேவை செய்ய நல் வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் அரசியல் சாசன தினத்தைக் கொண்டாடவும் வாய்ப்பு கிட்டியது.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே அரசியல் சாசன நாளைக் கடைப்பிடித்தார். பிரதமரான பின்னர் 2015-ல், அம்பேத்கரின் 125-வது பிறந்த தினத்தை ஒட்டி இதனை அரசு விழாவாக அறிவித்தார். அதனால்தான் நாம் அனைவரும் இன்று இங்கு ஒன்றிணைந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

அரசியல் சாசன நாளைக் கொண்டாட்டமாக மாற்றியதே நாம் அதன் மீது கொண்டுள்ள ஈர்ப்புக்கும் நம்பிக்கைக்கும் நல்சாட்சி''.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

SCROLL FOR NEXT