இந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை 89 லட்சத்தைத் தாண்டியது.
அதேவேளையில் தொடர்ந்து 7-வது நாளாக 50,000 பேருக்கும் கீழாகவே பாதிக்கப்படுவது சற்றே ஆறுதல் தரும் விஷயமாக அமைந்துள்ளது. கடைசியாக நவம்பர் 7-ம் தேதி அன்று 50,000க்கும் அதிகமாக பாதிப்பு இருந்தது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 38,617 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சில நாட்களுடன் ஒப்பிடுகையில் சற்றே அதிகமான எண்ணிக்கையாகும். அதாவது, செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 29,164 பேருக்கு மட்டுமே நாடு முழுவதும் தொற்று உறுதியாகியிருந்தது.
474 பேர் பலி:
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 474 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதனால், ஒட்டுமொத்தக் கரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 993 என்றளவில் உள்ளது. மொத்த தொற்று எண்ணிக்கை 89 லட்சத்து 19 ஆயிரத்து 908 என்றளவில் இருக்கிறது.
சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை:
கரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 4,46,805 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரத்தில் 44,739 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கே தற்போது 82,904 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2-வது இடத்தில் 70,191 பேருடன் கேரளா உள்ளது. தலைநகர் டெல்லியில் 42,004 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி தொற்று பாதிப்பு சதவீதம் 7.01% என்றளவிலும், குணமடைவோர் எண்ணிக்கை 93.42% சதவீதம் என்றளவிலும் இருப்பதாகத் தெரிகிறது.
10 லட்சம் பேரில் பாதிக்கப்பட்டோர் எவ்வளவு? என்ற கணக்கீட்டில் இந்தியா தொடர்ந்து பட்டியலில் கீழே இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.