பிஹாரில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் வென்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) முதல்வராக நிதிஷ்குமார் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். மத்தியில் இக்கூட்டணிக்கு தலைமை வகித்த பாஜக இந்தமுறை பிஹாரில் புதிய அனுகுமுறையை உருவாக்கி உள்ளது. இதன்படி, பிஹாரின் முன்னாள் துணைமுதல்வரான சுசில்குமார் மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பலருக்கும் புதிய ஆட்சியில் எந்த பதவிகளும் அளிக்கப்படவில்லை. இதன் பின்னணியில், பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
குறிப்பாக சுசில்குமார் மோடி கடந்த என்டிஏ ஆட்சிகளில் துணை முதல்வராக இருந்தபோது அவர், முதல்வர் நிதிஷுடன் நெருக்கமாக இருந்தார். இதனால் தன் கட்சிதலைமை கூறுவதையும் பொருட்படுத்தாமல், முதல்வர் நிதிஷின் கருத்துக்களை ஆமோதித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு இருவருக்குள் வளர்ந்திருந்த நெருக்கம் காரணமாக இருந்துள்ளது. இதனால், சுசில்குமாருக்கு இந்தமுறை துணை முதல்வர் பதவி கிடைக்கவில்லை.
இதே காரணத்தினால், என்டிஏ ஆட்சியில் தொடர்ந்து அமைச்சராக இருந்த பிரேம்குமார், வினோத் நாராயண் ஜா ஆகியோருக்கும் பதவி அளிக்கப்படவில்லை. வழக்கம் போல் முக்கிய துறையின் அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த நந்த் கிஷோர் யாதவ்,சபாநாயகராக அமர்த்தப்பட்டுள்ளார். இவரை ஒதுக்கி வைக்கும்விதத்திலேயே நந்த் கிஷோருக்குஅப்பதவி அளிக்கப்பட்டிருப் பதாகக் கருதப்படுகிறது.
எனினும், மாநில அமைச்சர் பதவியும் வகிக்காத தர்கிஷோர் பிரசாத்துக்கு துணை முதல்வர் பதவியை பாஜக அளித்துள்ளது. ஒரே ஒரு முறை மாநில அமைச் சராக இருந்த ரேணு தேவிக்கு கூடுதலாக துணை முதல்வர் பதவி கிடைத்துள்ளது. எனவே, பிஹாரின் மூத்த தலைவர்களை பாஜகவின் தேசிய தலைமை ஒதுக்கி வைக்கத் துவங்கி இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவரான சிவானாந்த் திவாரி கூறும்போது, ‘பலமுறை துணை முதல்வராக இருந்த சுசில்குமார் மோடி ஆழமான நிர்வாகத்திறன் பெற்றவர். ஆனால், அவர் பாஜகவை விட அதிகமான நேசத்தை முதல்வர் நிதிஷுடன்காட்டி வந்தார். இதன் காரணமாகவே அவர் ஒதுக்கப்படுவதாகக் கருதுகிறேன்.’ எனத் தெரிவித்தார்.
பிஹார் தேர்தலின் போது கரோனா தொற்று பாதித்த சுசில்குமார் மோடி, அதிகமான பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு தான்பாஜகவால் ஒதுக்கப்படும் சந்தேகம் முன்கூட்டியே எழுந்ததால் குறைந்த கூட்டங்களில் கலந்து கொண்டதாகவும் பேசப்பட்டது. இது தற்போது உறுதியாகி விட்ட நிலையில் சுசில்குமாருக்கு புதிய பணி அளிக்கப்பட இருப்பதாக பிஹார் தேர்தல் பொறுப்பாளர், தேவேந்திர பட்னாவீஸ் தெரித் துள்ளார்.