இந்தியா

வெளிப்படையாக விமர்சிக்க வேண்டாம்: காங்கிரஸாருக்கு சோனியா அறிவுரை

செய்திப்பிரிவு

தேர்தல் தோல்வி குறித்து கட்சியினர் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வெளிப்படையாக விமர்சிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சோனியா பேசியதாவது:

நாடு முழுவதும் காங்கிரஸ் மீது மக்களுக்கு கோபம் இருந்துள்ளது. அந்த கோபத்தை தணிக்கத் தவறிவிட்டோம். அதனால்தான் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியுள்ளது. இதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

தேர்தல் தோல்வி குறித்து கட்சியினர் வெளிப்படையாக விமர்சனம் செய்ய வேண்டாம். இதற்குப் பதிலாக கட்சியின் பலம், பலவீனம் குறித்து ஆய்வு செய்து அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கட்சியை மீண்டும் வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 10 கோடியே 69 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. பாஜகவுக்கு 17 கோடியே 16 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. வாக்குகள் எண்ணிக்கையில் நாம் 2-வது இடத்தில் உள்ளோம். பாரம்பரியமாக காங்கிரஸுக்கு தனி வாக்குவங்கி உள்ளது. அதனை பலப்படுத்த வேண்டும்.

நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்துடைய மதச்சார்பற்ற கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படலாம்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த பல்வேறு மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அவை குறித்து புதிய அரசு என்ன முடிவெடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். புதிய அரசின் முடிவை அறிந்த பிறகு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தின்போது கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடைசி வரிசையில் அமர்ந்திருந்தார்.

SCROLL FOR NEXT