எந்த முன்னேற்பாடுகளும் இல்லாத நிலையில் கரோனா வைரஸ் நெருக்கடியை நாடு சிறப்பாக எதிர்கொண்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.
கரோனா பெருந்தொற்று தொடர்பான கருத்தரங்கை ஹைதராபாத்தில் உள்ள ‘இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ்’ நேற்று காணொலி வாயிலாக நடத்தியது. இதில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியதாவது:
ஒரு மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்வதற்கு எந்த முன்னேற்பாடுகளும் இல்லாத நிலையில் நம் நாடு கரோனா வைரஸ் நெருக்கடியை சிறப்பாக எதிர்கொண்டது. இது நமது எதிர்காலம் குறித்த நம்பிக்கையை நமக்கு அளிக்க வேண்டும்.
நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய போது, பிபிஇ கிட்கள் மற்றும் வென்டிலேட்டர்களை போதிய அளவுக்கு இந்தியாவால் வழங்க முடியவில்லை. என்-95 முகக் கவசங்களும் குறைந்த அளவே கைவசம் இருந்தன. பரிசோதனைக் கருவிகள் நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படவில்லை. ஆனால் குறுகிய காலத்திலேயே நமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு, வெளிநாடுகளுக்கும் நாம் உதவத் ொடங்கினோம்.
15 லட்சம் படுக்கை வசதிகளுடன் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிகிச்சை மையங்களை நாம் ஏற்படுத்தினோம். 7 ஆயிரம் பரிசோதனை மையங்களால் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கரோனா பரவலை கண்காணிக்க ஆரோக்கிய சேது செயலி வடிவமைக்கப்பட்டது. இதெல்லாம் நமது உள்ளார்ந்த திறன்களைப் பற்றி பேசுகின்றன.
நெருக்கடியான தருணத்தை எதிர்கொள்ளும் இந்தத் திறன்களை பாதுகாப்பதும் அதை ஒரு நடைமுறையாக மாற்றுவதுமே நமக்கு முன்புள்ள தற்போதைய சவாலாக உள்ளது. கரோனா வைரஸ் நெருக்கடியில் இருந்து இந்தியா வெற்றிகரமாக வெளியே வரும். இவ்வாறு எஸ்.ஜெய்சங்கர் பேசினார்.