புரட்டாசி மாதம் 3-வது சனிக் கிழமையையொட்டி திருப்பதியில் பல்லாயிரக்கணக்கான தமிழக பக்தர்கள் குவிந்து வருவதால், இன்று முதல் 3 நாட்களுக்கு விஐபி தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
ஏழுமலையானுக்கு உகந்த புரட்டாசி மாதம் முழுவதும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பது வழக்கம்.
அதிலும், சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும். இந்நிலையில் நாளை 3-வது சனிக்கிழமை வருவதாலும், இன்று காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதாலும்,நேற்று முதலே திருப்பதிக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி விட்டது.
குறிப்பாக தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். இதில் ஏராளமான பக்தர்கள், மஞ்சள் ஆடை உடுத்தி, விரதமிருந்து அவர்களது சொந்த ஊர்களில் இருந்து நடை பயணமாக திருமலைக்கு வருகின்றனர்.
இதனால் அலிபிரி, வாரி மெட்டு ஆகிய மலைவழிப் பாதைகளிலும் கூட்டம் அதிகரித் துள்ளது. புதன் கிழமை மட்டும் 84,756 பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். உண்டியல் மூலம் ரூ.3.17 கோடி வருவாய் கிடைத் துள்ளது.
10 மணி நேரம் காத்திருப்பு
நேற்று காலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்ததால் வைகுண்டம் காம்பளக்ஸில் 27 அறைகளில், 10 மணி நேரம் வரைபக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர்.
நேற்று மாலை மேலும் பக்தர்களின் வருகை அதிகரித்தது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 4-ம் தேதி வரை விஐபி பக்தர்கள் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய் துள்ளது. இதன் மூலம் சாதாரண பக்தர்கள் அதிக அளவில் சிரமமின்றி தரிசனம் செய்ய முடியும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.