வெள்ளத்தில் செல்ஃபி எடுக்க முயன்றபோது மூன்று பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபச் சம்பவம் ஜார்க்கண்டில் நடந்துள்ளது. அவர்களைத் தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் திங்கள்கிழமை களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ஹிரிதீப் பி.ஜனார்த்தனன் பிடிஐயிடம் கூறியதாவது:
''ஆறு நண்பர்கள் ஞாயிற்றுக்கிழமை ஹிராடா அணைக்குச் சுற்றுலா வந்தனர். அவர்களில் சிலர் ஆற்றின் அருகே செல்ஃபி எடுக்க முயன்று கொண்டிருந்தனர். அதில் ஒருவர் திடீரென ஆற்றில் விழுந்து கடுமையான வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதனால் அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரைக் காப்பாற்ற அவரது இரண்டு நண்பர்கள் ஆற்றில் குதித்தனர். ஆனால், அவர்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், ஒரு காவலர் குழு சம்பவ இடத்திற்குச் சென்றது. ஆனால், நேற்று மாலை மிகவும் இருட்டாகிவிட்ட காரணமாக, காணாமல் போன மூவரையும் தேடும் நடவடிக்கையை அவர்களால் தொடங்க முடியவில்லை.
காணாமல்போன மூன்று பேருக்காக, திங்கள்கிழமை காலை போலீஸ் குழுக்களும் பேரிடர் மீட்புப் படையினரும் தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளனர்''.
இவ்வாறு காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
அருவிகள், மலை முகடுகள் உள்ளிட்ட ஆபத்தான இடங்களில் இளைஞர்கள் செல்ஃபி எடுப்பதால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. செல்ஃபி மோகத்தில் சாகசம் செய்வதாக நினைத்து உயிரையே பணயம் வைக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். உயிரையே பறிகொடுக்கும் செல்ஃபி சம்பவங்கள் குறித்து காவல்துறை தொடர்ந்து எச்சரிக்கை செய்து வந்தபோதும் பலரும் அதைப் பொருட்படுத்துவதில்லை.
ஆபத்தான இடங்களை ரசிப்பதோடு நிறுத்திக்கொண்டு காவல்துறையினரின் எச்சரிக்கையின்படி போதிய விழிப்புணர்வுடன் செல்ஃபி முயற்சிகளில் ஈடுபடாமல் இருந்தாலே வாழ்க்கையைத் தவறவிடும் ஆபத்திலிருந்து இளைஞர்கள் தப்பிக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.