ஒருவர் வகிக்கும் பதவியால் அவரது நிலை தீர்மானிக்கப்படுவதில்லை என பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாகத் தேர்வு செய்தனர். இதையடுத்து 4-வது முறையாக நிதிஷ்குமார் முதல்வராகப் இன்று பதவி ஏற்க உள்ளார்.
இந்தநிலையில் பிஹார் மாநில பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தர்கிஷோர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவைக் கட்சித் துணைத் தலைவராக ரேணு தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிஹார் மாநில துணை முதல்வராக இருந்து வரும் சுஷில் குமார் மோடியே பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பதவி வகித்து வந்தார்.
இந்த முறை அவர் அந்த பதவிக்கு தேர்வு செய்யப்படாத நிலையில் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகிய இருவரும் பிஹார் மாநில துணை முதல்வர்களாக பதவி ஏற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக சுஷில் குமார் மோடி மத்திய அமைச்சராகக் கூடும் என கருதப்படுகிறது.
இதுகுறித்து சுஷில் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘பாஜக மற்றும் சங் பரிவார் ஆசியுடன் கடந்த 40 ஆண்டுகாலமாக அரசியலில் இயங்கி வருகிறேன். கட்சித் தொண்டர் என்ற பொறுப்பை யாரும் என்னிடம் இருந்து பறிக்க முடியாது’’ எனக் கூறியுள்ளார்.
இதற்கு பிஹாரைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
‘‘மதிப்பிற்குரிய சுஷில் குமார் மோடி, நீங்கள் ஒரு தலைவர், துணை முதல்வராக இருக்கிறீ்ர்கள். எதிர்காலத்திலும் பாஜகவில் தொடர்ந்து தலைவராகவே இருப்பீர்கள். ஒருவர் வகிக்கும் பதவியால் அவரது நிலை தீர்மானிக்கப்படுவதில்லை.’’ எனக் கூறியுள்ளார்.