கோப்புப் படம் 
இந்தியா

கார்த்திகை முதல் தேதி; சபரிமலையில் மண்டல பூஜை தொடக்கம்: கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி

செய்திப்பிரிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை இன்று தொடங்கியதையடுத்து பக்தர்கள் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். கரோனா வைரஸ் பரவல் காலத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், முதல் முறையாக பக்தர்கள் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டனர். 5 நாட்கள் நடை திறக்கப்பட்ட நிலையில் நாள்தோறும் 250 பக்தர்கள் மட்டுமே கடும் கட்டுப்பாடுகளுக்குப்பின் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் டிசம்பர் 26-ம் தேதி வரையில் மண்டல பூஜையும், டிசம்பர் 30 முதல் ஜனவரி 14-ம் தேதி வரையும் மகரவிளக்குத் திருவிழா நடைபெற உள்ளது. 2 மாதங்கள் நீடிக்கும் இந்த சீசன் காலத்தில், கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

கேரளாவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைக் கேரள அரசும், தேவஸம்போர்டும் எடுத்துள்ளன. பக்தர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சபரிமலையில் மண்டல பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. தந்திரி சிறப்பு பூஜை செய்தபின் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் வழிபாட்டிற்காக இன்று முதல் அனுமதிக்கப்படுகிறார்கள்.

பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தபின்புதான் மலைக்கு வர வேண்டும். இதன் மூலம் அதிகமான கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும். தினந்தோறும் 1000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் மலை ஏற்றத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழைக் கண்டிப்பாக உடன் எடுத்துவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT