பிஹார் மாநில தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக தேர்வுசெய்யப்பட்டார். 7-வது முறையாக அவர் இன்று முதல்வராகப் பதவியேற்கிறார்.
பிஹாரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 10-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 74, ஐக்கியஜனதா தளம் 43, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 4, விகாஸ்சீல் இன்சான் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஒரு சுயேச்சைவேட்பாளரும் தேசிய ஜனநாயககூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு 110 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ்
தேர்தல் பிரச்சாரத்தின்போதே ஆளும் கூட்டணி சார்பில் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார்முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டார். ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக 110 தொகுதிகளில் போட்டியிட்டு 74 இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் கூட்டணியில் பாஜகவின் பலம் அதிகரித்திருப்பதால் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. எனினும் ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின்படி நிதிஷ்குமாரே முதல்வராகப் பதவியேற்பார் என்று பாஜக தலைமை திட்டவட்டமாக அறிவித்தது.
இந்த பின்னணியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிஹார் மாநில பாஜக மேலிட பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நிதிஷ் குமார் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மாநில ஆளுநர்பாகு சவுகானை நேரில் சந்தித்தமுதல்வர் நிதிஷ் குமார் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறும்போது, "புதிய ஆட்சியமைக்க உரிமை கோரினோம்.அரசுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநரிடம் அளித்தோம். திங்கள்கிழமை பிற்பகலில் பதவியேற்பு விழா நடைபெறும். இதில் யாரெல்லாம் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம். சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக அமைச்சரவை முடிவு எடுக்கும்" என்று தெரிவித்தார்.
7-வது முறை முதல்வர்
கடந்த 2000 மார்ச் மாதம் பிஹார் முதல்வராக நிதிஷ்குமார் முதல்முறையாகப் பதவியேற்றார். அப்போது 7 நாட்கள் மட்டுமே அவர் பதவியில் நீடித்தார். பெரும்பான்மை இல்லாததால் அவர் பதவி விலகினார்.
கடந்த 2005-ம் ஆண்டில் பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றது. அப்போது 2-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராகப் பதவியேற்றார். கடந்த 2010 நவம்பர் 26-ம்தேதி 3-வதுமுறையாக அவர் முதல்வரானார்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பின்னடைவை சந்தித்தது. இதைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ் குமார், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஜிதன் ராம் மாஞ்சியை முதல்வர் பதவியில் அமர வைத்தார்.
கடந்த 2015 பிப்ரவரியில் ஜிதன் ராம் மாஞ்சிக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஜிதன் ராம் ராஞ்சி பதவி விலகினார். அப்போது 4-வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரானார்.
கடந்த 2015 நவம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. அப்போது 5-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராகப் பதவியேற்றார். கடந்த 2017-ம் ஆண்டில் ராஷ்டிரிய ஜனதாதளத்துடன் கூட்டணியை முறித்த நிதிஷ் குமார் பாஜகவுடன் கைகோத்தார். அப்போது 6-வது முறையாக அவர் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
பாட்னாவில் இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் 7-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராகப் பதவியேற்கிறார்.
துணை முதல்வர் யார்?
பாஜகவின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் ஆட்சியில் துணைமுதல்வராகப் பதவி வகித்தார்.புதிய அரசில் அவர் துணை முதல்வராகப் பதவியேற்பாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.
அவருக்குப் பதிலாக பாஜக மூத்த தலைவர் தர்கிஷோர் பிரசாத்துணை முதல்வராகப் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. சுஷில்குமார் மோடிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றுபாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுஷில் குமார் மோடி நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "கடந்த 40 ஆண்டுகளாக பாஜகவின் தொண்டராகப் பணியாற்றி வருகிறேன். அந்த தொண்டர் பதவியைஎன்னிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.