தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமாராவ், பஞ்சாயத்து ராஜ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர் நேற்று வாரங்கலில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “தெலங்கானா மாநில வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை காட்டுவதில்லை. இதற்கு மத்திய அரசில் உள்ள நாயுடுவும் (வெங்கய்ய நாயுடு), இங்குள்ள நாயுடுவும் (சந்திரபாபு நாயுடு) முக்கிய காரணம். இவர்கள் இருவரும் தெலங்கானாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
மக்களின் ஏகோபித்த விருப்பத்தாலும் தியாகத்தாலும் தான் தெலங்கானா மாநிலம் உருவானது. மாவோயிஸ்ட்டுகளின் கொள்கைதான் எங்களின் கொள்கையும் கூட. ஆனால் தற்போது அரசு துப்பாக்கி தூக்குவதை ஆதரிக்காது. தெலங்கானாவில் மாவோயிஸ்ட்டுகளின் துப்பாக்கி சத்தம் கேட்கக்கூடாது. பல வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றி மக்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறது எங்கள் அரசு” என்றார்.
மாவோயிஸ்ட்டுகள் கொள்கை தான் எங்கள் கொள்கை என்று அமைச்சர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.