சிவானந்த் திவாரி 
இந்தியா

‘‘பிஹாரில் தோல்விக்கு காங்கிரஸ் காரணம்; 70 தொகுதியில் போட்டியிட்டு 70 கூட்டங்களை கூட நடத்தவில்லை’’ - ஆர்ஜேடி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பிஹாரில் மகா கூட்டணியின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியே காரணம், 70 தொகுதியில் போட்டியிட்ட அவர்கள் 70 பொதுக்கூட்டங்களைக் கூட நடத்தவில்லை என கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதாதளம் குற்றம் சாட்டியுள்ளது.

பிஹாரில் 243 சட்டப்பேரவைகளுக்கும் நடந்த தேர்தலில் 125 இடங்களை நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு, பாஜக கூட்டணி வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. இதில் பாஜக 74 இடங்களையும், ஜேடியு 43 இடங்களையும் வென்றன. கடந்த 2005ம் ஆண்டுத் தேர்தலுக்குப்பின் ஜேடியு மிகவும் மோசமாகச் செயல்பட்டு 41 இடங்களில் மட்டுமே இந்த முறை வென்றது.

எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணி 110 இடங்களில் வென்றது. இருப்பினும், மாநிலத்தில் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக, ஹெச்ஏஎம் கட்சி, விகாஷீல் இன்சான் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் பாட்னாவில் நிதிஷ் குமார் இல்லத்தில் இன்று பிற்பகலில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பாஜக சார்பில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், எம்எல்ஏ தர்கிஷோர், நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையின் முடிவில் பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாகத் தேர்வு செய்தனர். இதையடுத்து, 4-வது முறையாக நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.

ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவர் சிவானந்த் திவாரி கூறியதாவது:

‘‘பிஹாரில் மகா கூட்டணியின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். 70 தொகுதியில் போட்டியிட்ட அவர்கள் 70 பொதுக்கூட்டங்களைக் கூட நடத்தவில்லை. ராகுல் காந்தி 3 நாட்கள் தான் பிரச்சாரம் செய்தார். பிரியங்கா காந்தி வரவே வில்லை. மக்களிடம் கொஞ்சம் கூட செல்வாக்கு இல்லாத காங்கிரஸ் தலைவர்கள் தான் பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். இது கொஞ்சம் கூட சரியல்ல.’’

SCROLL FOR NEXT