பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி: கோப்புப் படம். 
இந்தியா

இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் நிர்பந்தங்களை ஒதுக்கி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: மெகபூபா முப்தி வேண்டுகோள்

பிடிஐ

இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் நிர்பந்தங்களை ஒதுக்கிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இரு தரப்பிலும் உயிரிழப்பைத் தடுக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா, குப்வாரா மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளான தாவார், உரி, கீரன், நவுகம் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நேற்று தாக்குதல் நடத்தினர்.

இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர், எல்லைப் பாதுகாப்புப் படை துணை ஆய்வாளர் ஒருவர், பொதுமக்கள் 6 பேர் இந்தியா தரப்பில் வீரமரணம் அடைந்தனர். இந்தியா தரப்பில் அளித்த பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலையடுத்து, ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி ட்விட்டரில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரு நாடுகளின் தரப்பிலும் உயிரிழப்புகளைக் காண வருத்தமாக இருக்கிறது. இந்தியாவும், பாகிஸ்தானும் அரசியல் நிர்பந்தங்களைத் தாண்டி பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் ஆகியோரால் ஒப்புக் கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT