மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி 189 பேரை கொன்ற வழக்கில் 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மகாராஷ்டிர சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம்தேதி மும்பை புறநகர் ரயில்கள் பலவற்றில் முதல் வகுப்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 7 ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 189 பேர் கொல்லப்பட்டனர். 800-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 10 நிமிட நேரத்துக்குள் இவை அனைத்தும் நடந்து முடிந்தன.
நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தை நடத்திய குற்றவாளிகளுக்கு நேற்று தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை சிறப்பு நீதிபதி யதின் டி. ஷிண்டே வழங்கினார்.
தூக்கு தண்டனை
குற்றவாளிகளில் கமால் அகமது அன்சாரி (37), எம். பைசல் ஷேக் (36), எஹ்தி ஷியாம் சித்திகி (30), நவீத் ஹுசைன் கான் (30), ஆசிப் கான் (38) ஆகிய 5 பேரும் ரயில் பெட்டிகளில் குண்டு வைத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
189 பேரை கொலை செய்த குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழும், தீவிரவாத தாக்குதல் நடத்தியதற்காக யு.ஏ.பி.ஏ சட்டப்பிரிவு 16-ன் கீழும் இவர்கள் ஐவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை பெற்றவர்கள்
தன்வீர் அகமது அன்சாரி (37), முகம்மது மஜித் ஷபி (32), ஷேக் ஆலம் ஷேக் (41), முகமது சாஜித் அன்சாரி (34), முஸம்மில் ஷேக் (27),சோஹைல் மெஹ்மூத் ஷேக் (43), ஜமீர் அகமது ஷேக் (36) ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்ட இந்த 12 பேருக்கும் தண்டனை நிர்ணயிப்பதற்கான வாதம் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வாரம் நடந்து முடிந்தது.
12 பேரில் 8 பேருக்கு மரண தண்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் 5 பேருக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 23-ம் தேதி விசாரணையை முடித்த மகாராஷ்டிர மாநில சிறப்பு நீதிமன்றம் தண்டனை விவரம் செப்டம்பர் 30-ம் தேதி அறிவிக்கப்படும் என கூறி ஒத்தி வைத்தது.
சிமியுடன் தொடர்பு
இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டிருந்த 13 பேரில் 12 பேர் குற்றவாளிகள் என்பதையும், இவர்களுக்கு தடை செய்யப்பட்ட சிமி (இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு) அமைப்புடன் தொடர்பு இருப்பதையும் நீதிபதி கடந்த செப்டம்பர் 11-ம் தேதி உறுதி செய்தார். ஒருவர் மட்டும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
வழக்கு சம்பந்தமான புலனாய்வு விசாரணையின் போது 13 பேரும் கைது செய்யப்பட்டு நீதி மன்ற விசாரணைக்கு உட்படுத்தப் பட்டனர். கைதான அனைவருமே இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
தலைமறைவு குற்றவாளிகள்
2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் மொத்தம் 30 பேர் மீது இந்த வழக்கில் தீவிரவாத தடுப்பு போலீஸ் பிரிவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த 30 பேரில் 17 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களில் 13 பேர் பாகிஸ்தானியர்கள். இதில் பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினரான ஆசம் சிமா என்பவரும் ஒருவர்.
தீர்ப்புக்கு வரவேற்பு
மகாராஷ்டிர மாநில அரசு இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது. கடந்த ஓராண்டில் மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் எடுத்த முயற்சியால் நீதித்துறையில் இருந்த ஓட்டைகளை அடைக்கப்பட்டன. எனவேதான் இந்த குற்றவாளி களுக்கு சரியான தண்டனை கிடைத் துள்ளது என்று மாநில நிதியமைச்சர் சுதிர் முங்கன்திவார் கூறியுள்ளார்.நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.