ஆந்திர மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் உள்ள விமான நிலையம் ஹுத் ஹுத் புயலால் பலத்த சேதமடைந்தது. ரூ. 3.32 கோடி செலவில் இதனை சீரமைக்கும் பணியின் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: ஆந்திர மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. புதிய தலைநகரப்பணிகள் நடைபெறுவதற்கும் முழுமையாக ஒத்துழைக்கும்.
ஆனால் சிலர், வளர்ச்சி பணிகளை பார்க்காமல் வீண் அரசியலில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசுக்கு ஒத்துழைப்பதா? அல்லது வீண் அரசியலா? என்பதை அவர்களே முடிவெடுத்து கொள்ள வேண்டும். ஹுத் ஹுத் புயலை இப்பகுதி மக்கள் மிகவும் தைரியமாக எதிர் கொண்டனர்.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.
பின்னர் விசாகப்பட்டினத்தில் ஃபிலிம் நகருக்கும் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசும் போது, “சென்னையிலேயே முற்றிலுமாக இயங்கி கொண்டி ருந்த தெலுங்கு திரையுலகத்தை ஹைதராபாத்துக்கு மாற்ற என்.டி. ராமாராவும், நாகேஸ்வர ராவும் பெரு முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற்றனர். தற்போது, ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் பிலிம் நகர் கட்ட இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.
இனி தெலுங்கு திரை உலத்தினர் தங்களது தயாரிப்புகளை விசாகப்பட்டினத்துக்கு மாற்ற முன் வரவேண்டும்” என்றார்.