பிரதிநிதித்துவப் படம். 
இந்தியா

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைவீரர் வீரமரணம்: பாகிஸ்தான் அத்துமீறல்

பிடிஐ

காஷ்மீரில் போர்நிறுத்த மீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலால் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் வீரமரணம் அடைந்துள்ளார். இதில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் எல்லைப் பகுதியில் அடிக்கடி இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

''காஷ்மீரில் வெள்ளிக்கிழமை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டனர். இதில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த துணை ஆய்வாளர் ராகேஷ் தோவல் வீரமரணம் அடைந்தார். ஒரு வீரர் காயமடைந்தார்.

பாரமுல்லாவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே எல்லைப் பாதுகாப்புப் படையின் பீரங்கி பாசறையில் எஸ்.ஐ. ராகேஷ் தோவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இன்று மதியம் 1.15 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தலையில் காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

மற்றொரு ராணுவ வீரரான வாசு ராஜாவின் கைகளிலும் கன்னங்களிலும் பிளவுபட்ட காயம் ஏற்பட்டது. அவர் உயிருக்கு ஆபத்தில்லை.

துணை ஆய்வாளர் ராகேஷ் தோவல், எல்லையைக் காக்கும் கடமையில் இருந்தபோது தன் உயிரைப் பணயம் வைத்து மிக உயர்ந்த தியாகத்தைச் செய்துள்ளார். அவர் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

துப்பாக்கிச் சூடு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை திறம்பட பதிலளித்து வருகிறது''.

இவ்வாறு மூத்த அதிகாரி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT