பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக ஆயுர்வேத நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றும் காட்சி. 
இந்தியா

உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம்; உலகின் மருந்தகமாக இந்தியா உருவெடுத்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

பிடிஐ

உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை அமைக்கும் உலக சுகாதார நிறுவன அறிவிப்பு குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா உலகின் மருந்தகமாக உருவெடுத்துள்ளது. அதைப்போவே, பாரம்பரிய மருத்துவத்திற்கான இந்த மையம் உலகளாவிய ஆரோக்கியத்திற்கான மையமாக இந்தியாவில் அமையும் என்று நம்புவதாக மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய ஆயுர்வேத தினத்திற்குப் பெருமை சேர்க்கும்விதமாக, உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை இந்தியாவில் அமைக்கப்போவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

5-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, நாட்டில் விரைவில் உருவாகப்போகும் இரண்டு புதிய ஆயுர்வேத நிறுவனங்களுக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குஜராத்தைச் சேர்ந்த ஜாம்நகரில் செயல்பட உள்ள ஆயுர்வேதத்தில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.டி.ஆர்.ஏ), ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெய்ப்பூரில் செயல்பட உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனம் (என்.ஐ.ஏ) ஆகிய இரு நிறுவனங்களையும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள வீடியோவில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறியதாவது:

''உலக சுகாதார மருத்துவத்தின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை இந்தியாவில் திறக்க ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பாரம்பரிய மற்றும் பக்க விளைவற்ற மாற்று மருத்துவத்தின் சான்றுகள், ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்தும்.

இந்தப் புதிய மையம் உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவ முறைகளை அமல்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும்.

அத்துடன் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான, சிறந்த மற்றும் பாதுகாப்பான உலகத்தைக் கட்டமைக்கும் பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை வலுப்படுத்தும் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்களை வளர்ப்பதில் ஈடுபடும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும்''.

இவ்வாறு டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் தெரிவித்தார்.

உலகளாவிய ஆரோக்கியத்திற்கான மையமாக மாறும்: பிரதமர் மோடி பேச்சு

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி கூறியதாவது:

''ஆயுர்வேதம் இந்தியாவின் பாரம்பரியமாகும். இது மனித குலத்தின் நலனை நோக்கமாகக் கொண்டது. மேலும், நாட்டின் பாரம்பரிய அறிவு மற்ற நாடுகளை வளமாக்குவதைக் கண்டு அனைத்து இந்தியர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை நிறுவுவதற்கு உலக சுகாதார நிறுவனம் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை அளிக்கிறது. இப்போது இந்தத் திசையில் இந்தியாவில் இருந்து பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்தப் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்கியதற்காக உலக சுகாதார நிறுவனத்திற்கும் குறிப்பாக அதன் தலைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்.

இந்தியா உலகின் மருந்தகமாக உருவெடுத்துள்ளது. அதைப்போவே, பாரம்பரிய மருத்துவத்திற்கான இந்த மையம் உலகளாவிய ஆரோக்கியத்திற்கான மையமாக இந்தியாவில் அமையும் என்று நம்புகிறேன்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இன்று தேசிய ஆயுர்வேத தினம். மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், 2016 முதல், ஆண்டுதோறும் தன்வந்தரி ஜெயந்தி (தந்தேராஸ்) தினத்தன்று தேசிய ஆயுர்வேத தினத்தையும் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டைப் பொறுத்தவரை 5-வது ஆயுர்வேத தினமான 2020ஆம் ஆண்டு கோவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் மெய்நிகர் தளங்களில் பெரும்பாலும் அனுசரிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT