ஜனவரியில் கோவிட் 2-வது அலைக்கு வாய்ப்புள்ளதாகவும், போதும் எனக் கருதிவிடாமல் சோதனைகளை மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் முதல், மகாராஷ்டிராவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை மகாராஷ்டிராவில் 17,36,329 பேருக்கு கோவிட் -19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் சிகிச்சை பலனின்றி 45,682 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர அரசின் சுகாதாரச் சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
''அக்டோபர் மாதம் முதல், மகாராஷ்டிராவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. எனினும் வைரஸின் இரண்டாவது அலை பல நாடுகளில், குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள நாடுகளைத் தாக்கியுள்ளது.
ஐரோப்பாவில் நடப்பதை அடிப்படையாகக் கொண்டு இரண்டாவது அலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் கோவிட்-19 இரண்டாவது அலைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிட்-19 பரிசோதனைகளில் எந்தவிதமான மனநிறைவும் அடைய வேண்டாம். மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்ட மற்றும் நகராட்சிகளிலும் கரோனா முடிவு கண்டறியப்படுவதற்கான ஆய்வகங்கள் சரியாகச் செயல்பட வேண்டும்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, நாள் ஒன்றுக்கு 10 லட்சம் மக்களுக்கு 140 சோதனைகள் செய்யப்பட வேண்டும். உடனுக்குடன் கரோனா பரிசோதனை முடிவுகள் கண்டறியப்பட, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநகராட்சி வரம்புகளிலும் சோதனை ஆய்வகங்கள் இருக்க வேண்டும்.
பட்டாசு இல்லாத தீபாவளி
கோவிட் -19 நோயாளிகள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு பட்டாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவது காலத்தின் தேவை.
கோவிட்-19 நெறிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது, அடிக்கடி கை கழுவுதல், மேற்பரப்புகளைக் கிருமிநீக்கம் செய்தல், தனிமனித இடைவெளி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். நோய்த் தொற்று பரவாத வண்ணம் பொது இடங்களில் துப்புதலைத் தடுக்கவும் மற்றும் புகைப் பிடிப்பதைத் தவிர்க்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். பயணங்களைத் தவிருங்கள்''.
இவ்வாறு மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.