தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம், ‘ஆசியான்’ என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புரூனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஆசியான் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் நட்பு நாடுகளாக இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்தியா - ஆசியான் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 17-வது ஆசியான் உச்சி மாநாடு நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இடையேயான ஒத்துழைப்பானது, நமக்கு இடையேயான வரலாற்று, புவியியல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். எங்களுடைய எளிதான கிழக்கு கொள்கைகளை செயல்படுத்தும் முக்கிய அமைப்பாக ஆசியான் அமைப்பு உள்ளது.
உலகம் முழுவதும் தற்போது கரோனா வைரஸ் தொற்று அபாயம் இருப்பதால் இந்த ஆண்டு இந்தியா -ஆசியான் மாநாடு காணொலி மூலம் நடத்தப்படுகிறது. எனவே அனைத்து நாட்டின் தலைவர்களும் ஒன்றாக நின்று இந்த ஆண்டு புகைப்படம் எடுக்க முடியாது.
ஒவ்வொரு துறையிலும் இந்தியா, ஆசியான் இடையே இணைப்பை அதிகப்படுத்த விரும்புகிறோம். காணொலி மூலம் மாநாடு நடைபெற்றாலும் நமக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப தேவையான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.