இந்தியா

நமது கொள்கை தேசத்தின் நலனுக்கு எதிராக போகக்கூடாது: ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் சிலையை திறந்து வைத்து பிரதமர் மோடி பேச்சு

செய்திப்பிரிவு

நமது கொள்கை தேசத்தின் நலனுக்கு எதிராக போகக்கூடாது என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் ஆளுயர சிலையை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

ஜே.என்.யுவில் உள்ள சுவாமி விவேகானந்தரின் சிலை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் மற்றும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். விவேகானந்தரின் சிலையை பார்க்கும் அனைவருக்கும் தேசத்தின் மீதான பக்தியையும் தீவிரமான அன்பையும் கற்பிக்கும் என்று நம்புகிறேன்.

சுவாமி விவேகானந்தரின் தத்துவமும், லட்சியமும் நம் நாட்டு இளைஞர்களுக்கு இன்றைக்கும் வழிகாட்டுகிறது. உலகெங்கும் லட்சக்கணக்கானோருக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் மிக உயர்ந்த ஆளுமையைப் பெற்றதற்காக இந்தியா பெருமை கொள்கிறது.

சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலத்தைப் போலவே இன்றைய காலகட்டத்துக்கும் அவரது லட்சியங்கள் பொருத்தமாக உள்ளது

மக்களுக்கு சேவையாற்றுவதும், நாட்டின் இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதும், தேசத்தை அனைத்து விதங்களிலும் வலுப்படுத்தி, சர்வதேச அளவில் அதன் மதிப்பை உயர்த்தும்.

சுவாமி விவேகானந்தர் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மெச்சிகன் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற போது இந்த நூற்றாண்டு உங்களுடையது என்றாலும், அடுத்த நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்று கூறியிருந்தார். இந்த வார்த்தையும், எதிர்காலபார்வையையும் உணர வேண்டியது நமது பொறுப்பு ஆகும்.

அவரது சிலை அனைவருக்கும் தேசத்தின் மீதான பக்தியையும் தீவிரமான அன்பையும் கற்பிக்கிறது என்று நம்புகிறேன். இது விவேகானந்தர் வாழ்க்கையின் மிக உயர்ந்த செய்தி. ஒற்றுமை குறித்த பார்வையில் இது நாட்டிற்கு ஊக்கமளிக்கட்டும்.

பல கொள்கைகளை கொண்டவர்களையும் மகாத்மா காந்தி இணைத்தார். தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் கூட தலைவர்கள் தங்கள் கொள்கைகளில் உறுதியுடன் இருந்தனர். நெருக்கடி நிலை காலத்தில் பல கொள்கைகள் கொண்டவர்கள் ஒன்றாக ஒரே குடையின் கீழ் வந்தனர். நெருக்கடி நிலை எதிர்ப்பு என்ற ஒற்றை சிந்தனை அவர்களை இணைத்தது. அதுபோலவே மாணவர்கள் உட்பட பலருக்கும் பல கொள்கைகள் இருக்கலாம். ஆனால் அது தேசத்திற்கு எதிராக செல்லக்கூடாது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT