உல்பா (ஐ) தீவிரவாத இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான திர்ஷ்டி ராஜ்கோவா மற்றும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர் இந்திய ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.
கீழ் அசாம் பகுதியில் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளுக்காக உல்ஃபா தலைவர்களில் ஒருவரான திர்ஷ்டி ராஜ்கோவா தேடப்பட்டு வந்தார். உளவுப் பிரிவுக்கு கிடைத்த உறுதியான தகவலின் படி மேகாலயா-அசாம்-வங்கதேசம் எல்லைப் பகுதியில் விரைவான மற்றும் நன்கு திட்டமிடுதலுடன் கூடிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
கடந்த ஒன்பது மாதங்களாக நீடித்த தேடுதல் வேட்டையின் முடிவில் உல்ஃபா தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர்களை சரணடைய வைக்கும் முயற்சியில் ராணுவ உளவுப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டனர். இதையடுத்து முன்னணி உல்ஃபா தலைவர் எஸ்.எஸ்.கர்ணல் திர்ஷ்டி ராஜ்கோவா சரண் அடைய சம்மதம் தெரிவித்தார்.
அவருடன், எஸ்.எஸ்.கார்போரல் வேதாந்தா, யாசிம் அசோம், ரோப்ஜோஜி அசோம் மற்றும் மிதுன் அசோம் ஆகியோரும் சரண் அடைந்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த ஏராளமான ஆயுதங்களையும் ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.
திர்ஷ்டி ராஜ்கோவா சரண் அடைந்தது உல்ஃபா இயக்கத்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதன் வாயிலாக இந்த பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் சமாதான நடவடிக்கையில் ஒரு புதிய விடியல் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் வாயிலாக எல்லா நேரங்களிலும் இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் இயல்பு நிலையை உறுதி செய்வதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.