கர்நாடகாவில் நடந்த இடைத்தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைத்ததன் மூலம் எடியூரப்பா தன் முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 3-ம் தேதி ராஜராஜேஷ்வரி நகர், சிரா ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய மூன்று பெரிய கட்சிகளும் மோதியதால் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் இரு தொகுதிகளிலும் காங்கிரஸ், மஜத ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர். பாஜக வேட்பாளர்கள் முனிரத்னா (ராஜராஜேஷ்வரி நகர்) 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், ராஜேஷ் கவுடா (சிரா) 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் அமோக வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் எடியூரப்பாவின் பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது கடந்த சில மாதங்களாக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்ற வேண்டும் எனச் சிலர் கோரினர். தற்போதைய இடைத்தேர்தல் வெற்றி எடியூரப்பாவுக்கு எதிரான கோஷ்டியை மவுனிக்கச் செய்துள்ளது. எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஆட்சியில் தலையிடுவதாகவும், அவர் நிழல் முதல்வர் போலச் செயல்படுவதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் விஜயேந்திரா தலைமையில் தேர்தலைத் சந்தித்து அதில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிலும் சிரா தொகுதியில் பாஜக முதல் முறையாக வென்றிருப்பதால் எடியூரப்பா மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த வெற்றியால் எடியூரப்பா தன் முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொண்டுள்ளதோடு, பாஜகவின் செல்வாக்கையும் உயர்த்தியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சரவை விரிவாக்கம்
இதனிடையே கர்நாடக அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப எடியூரப்பா முடிவெடுத்துள்ளார். விரைவில் டெல்லி சென்று மேலிடத் தலைவர்களைச் சந்தித்து யாருக்கு அமைச்சர் பதவி வழங்கலாம் என ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும், அமைச்சரவையில் செயல்படாமல் இருக்கும் ஓரிருவரை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளார். இதனிடையே எம்.டி.பி.நாகராஜ், முனி ரத்னா, விஸ்வநாத், சங்கர் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்குப் பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் எனத் தெரிகிறது.