மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுடெல்லி தேசிய ஊடக மையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் காட்சி | படம்: சிவகுமார் புஷ்பக்கர் 
இந்தியா

கடுமையான ஊரடங்குக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் வலுவான மீட்சியைக் காண்கிறது: நிர்மலா சீதாராமன்

பிடிஐ

நீண்டகால மற்றும் கடுமையான ஊரடங்குக்குப் பின்னர் இந்தியப் பொருளாதாரம் வலுவான மீட்சியைக் கண்டுவருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

''இந்தியாவில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. கோவிட்-19 செயலில் உள்ள எண்ணிக்கை 10 லட்சத்திலிருந்து 4.89 லட்சமாகக் குறைந்துள்ளது. கரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட இறப்பு விகிதம் 1.47 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்தியாவில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, நீண்டகால கடுமையான ஊரடங்குக்குப் பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் இந்தியப் பொருளாதாரம் வலுவான மீட்சியைக் கண்டுவருகிறது.

வளர்ச்சியை அதிகரிப்பதற்கான கூடுதல் தூண்டுதல் நடவடிக்கைகளாக இன்று மத்திய அரசின் மூலம் மக்களிடம் முன்னெடுக்கப்பட்டுவரும் மைக்ரோ-பொருளாதாரக் கொள்கைகளும் பொருளாதார மீட்சியை நோக்கிச் செல்லும் முக்கியக் காரணிகள் ஆகும்.

ஜி.எஸ்.டி அதிகரிப்பு

எரிசக்தி நுகர்வு வளர்ச்சி அக்டோபரில் ஆண்டுக்கு 12 சதவீதமாக உயர்ந்தது.

நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.55 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

தினசரி சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்லப்படும் சரக்குகளின் எடை அளவு 12 சதவீதத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு

மேலும், அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) வருவாய் 13 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கி, கணிப்பு ஒன்றைத் தெரிவித்துள்ளது. அதில், முந்தைய கணிப்பிலிருந்து கால் பங்கிற்கு முன்னதாக, 2020-21 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சிக்குத் திரும்புவதற்கான வலுவான வாய்ப்பை ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

தேவைகள் அதிகரிப்பதன் காரணமாக மட்டுமல்ல, வலுவான பொருளாதார வளர்ச்சி காரணமாகவும் இந்தப் பொருளாதார மீளுருவாக்கம் ஏற்பட்டுள்ளதாக முக்கியப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துக் கூறியுள்ளனர்''.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவிததுள்ளார்.

SCROLL FOR NEXT