பெண் போலீஸாரைத் தாக்கிய வழக்கில் ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியைக் கைது செய்ய மும்பை போலீஸார் தீவிரமாக இருப்பதை அறிந்து, செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு உள்ளரங்கு வடிவமைப்பாளர் ஒருவர் செய்த பணிகளுக்குப் பணம் தராமல் ரிபப்ளிக் சேனல் இழுத்தடித்ததால் அவர் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். ஆனால், அந்தக் காலகட்டத்தில் பாஜக ஆட்சி மாநிலத்தில் நடந்ததால், அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் உள்ளரங்கு வடிவமைப்பாளரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் போலீஸார் கடந்த 4-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்கியது.
இதில் கடந்த 4-ம்தேதி லோவர் பரேலில் பகுதியில் உள்ள வீட்டில் அர்னாப் கோஸ்வாமி இருந்தபோது போலீஸார் அவரைக் கைது செய்தனர். போலீஸார் அர்னாப் கோஸ்வாமியைக் கைது செய்ய முயன்றபோது, பெண் போலீஸார் ஒருவரை அர்னாப் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைதான அர்னாப் கோஸ்வாமி மீது பெண் போலீஸாரைத் தாக்கிய வழக்கை என்.எம்.ஜோஷி மார்க் போலீஸார் பதிவு செய்தனர்.
அர்னாப் கோஸ்வாமி மீது ஐபிசி 153 (அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல்), 504 பிரிவு (உள்நோக்கத்துடன் புண்படுத்தி அமைதியைக் குலைத்தல்) 506 (குற்றச்சதி) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்ட நிலையில், பெண் போலீஸாரைத் தாக்கிய வழக்கில் அவரைக் கைது செய்ய மும்பை போலீஸார் ஆயத்தமாகி வருவதாகத் தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, தனது வழக்கறிஞர் பி.பி.ஜாதவ் மூலம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அர்னாப் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது.