பிஹாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கலாம். ஆனால், உண்மையான வெற்றிக்கு உரித்தானவர் தேஜஸ்வி யாதவ்தான். அவரின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிதான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
பிஹாரில் 243 சட்டப்பேரவைகளுக்கும் நடந்த தேர்தலில் 125 இடங்களை நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு, பாஜக கூட்டணி வென்றது. 110 இடங்களில் காங்கிரஸ், ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணி கைப்பற்றியது. இருப்பினும், மாநிலத்தில் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உருவெடுத்துள்ளது.
பிஹார் தேர்தல் முடிவு குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடனா சாம்னாவில் இன்று தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''பிஹாரை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பு இறுதியாக பாஜகவின் கரங்களில் சென்று சேர்ந்துள்ளது. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக வரப்போகிறார். பிஹாரில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பிரதமர் மோடியைத்தான் காரணமாகக் கூற வேண்டும்.
எவ்வாறாகினும் இது ஒரு எண் விளையாட்டு. தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தத் தேர்தலில் வென்றிருக்கலாம், ஆனால் உண்மையான வெற்றியாளர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் 31 வயதாகும் தேஜ்வி யாதவ்தான்.
தேஜஸ்வியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த அதிர்ஷ்டத்தை பாஜகவால் பெற முடியவில்லை. அதிகாரத்தைக் காப்பாற்றிய மகிழ்ச்சியைக் கொண்டாட முடியும். ஆனால், வெற்றி தேஜஸ்வி யாதவின் தலையில் உள்ளது.
தேஜஸ்வி யாதவின் மகா கூட்டணி 110 இடங்களில் வென்றுள்ளது. பல தொகுதிகளில் கடைசிக் கட்ட வாக்குப்பதிவின்போது, பல்வேறு குழப்பங்களும், தெளிவில்லாத சூழல்களும் இருந்தன என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் குற்றம் சாட்டுகிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 119 வேட்பாளர்கள் வென்றிருப்பதாக அறிவித்தது. ஆனால், நிதிஷ் குமாரின் உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளதாக தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டுகிறார்.
பிஹார் மாநிலத்துக்கு மீண்டும் முதல்வராக நிதிஷ் குமார் வந்திருக்கலாம். ஆனால், மக்களிடையே எழுந்துள்ள கருத்து என்ன, மனப்பாங்கு என்ன?
மக்கள் தெளிவாக உணர்த்தியது என்னவென்றால், எதிர் மனநிலையோடு இருந்த இரு கட்சிகளுக்கு வெற்றியை அளித்துள்ளனர். ஒன்று ராஷ்ட்ரிய ஜனதா தளம், மற்றொன்று பாஜக. இதில் நிதிஷ் குமாரின் கட்சி எங்குமே இல்லை.
மக்கள் நிதிஷ் குமாரை இந்தத் தேர்தலில் தண்டித்துள்ளார்கள். இருப்பினும் மீண்டும் அவரே முதல்வராக வரப்போகிறார். இது மக்களின் மக்களின் கருத்தை அவமதிப்பதாகும்.
நிதிஷ் குமாரின் கட்சிக்கு எதிராக லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியதால், ஜேடியு கட்சியைச் சேர்ந்த 20 வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். நிதிஷ் குமாருக்கு எதிராக சிராக் பாஸ்வான் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பிரதமர் மோடி இது தொடர்பாக சிராக் பாஸ்வானிடம் பேசவில்லை. ஆனாலும், சிராக் பாஸ்வான் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கிறார்''.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.