குடும்பத்தால் நடத்தப்படும் கட்சி இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். பாஜகவுடன் ஜனநாயக ரீதியாக மோதி வெல்லத் துணிச்சல் இல்லாதவர்கள், எங்களின் தொண்டர்களைக் கொலை செய்கிறார்கள் என்று பிஹார் தேர்தல் வெற்றிக்குப் பின் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிஹாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இது மட்டுமல்லாமல் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களிலும் பாஜக அமோகமான வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றி தொடர்பாக டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் நமக்குக் கிடைத்த வெற்றிக்கான காரணம், ஒவ்வொருவரின் ஆதரவு, ஒவ்வொருவருக்கான வளர்ச்சி, ஒவ்வொருவருக்கான நம்பிக்கை எனும் தாரக மந்திரம்தான்.
பிஹார் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்பது வளர்ச்சியை நோக்கி யார் நேர்மையாக உழைக்கிறார்களோ அவர்களுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள் என்பதை வெளிக்காட்டுகிறது.
21-வது நூற்றாண்டில் தேசிய அரசியல் என்பது வளர்ச்சியை அடிப்படையாக் கொண்டது மட்டும்தான் என்று மக்கள் முடிவுசெய்துவிட்டார்கள்.
பாஜகவுடன் ஜனநாயக ரீதியாக, நேரடியாக மோத முடியாதவர்கள் நமது தொண்டர்களைக் கொலை செய்கிறார்கள். சில இடங்களில் பாஜக தொண்டர்களைக் கொலை செய்து அவர்களின் இலக்கை உணர முடியும் என நினைக்கிறார்கள். இந்தக் கொலையைச் செய்பவர்களுக்கு நான் எச்சரிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.
தேர்தல் வரும் போகும், வெற்றி தோல்விகள் இருக்கும். ஆனால், ஜனநாயகத்தில் அரசியல் கொலைகள் செய்யும் செயல் ஒருபோதும் வெற்றி பெறாது.
குடும்பத்தால் ஆளப்படும் கட்சி இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். ஒரு தேசியக் கட்சியே ஒரு குடும்பத்துக்கு இரையாகிவிட்டது.
இந்தத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு அளித்த ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. அதேபோல, தேர்தலைச் சிறப்பாக நடத்திய தேர்தல் ஆணையம், பாதுகாப்புப் படையினர், மாநில நிர்வாகம் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களவைத தேர்தலின் வெளிப்பாடாக இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் பரவலாக பாஜக வென்றது அதேபோலத்தான் மக்கள் இந்தத் தேர்தலிலும் ஆதரவு அளித்துள்ளார்கள்.
ஏழைகள், விளிம்புநிலைச் சமூகத்தினருக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கும் ஒரே தேசியக் கட்சி பாஜக மட்டும்தான். ஒவ்வொரு மண்டலம், பிரிவினரும் சமூகத்துக்குத் தேவை என்பதை பாஜக புரிந்து கொண்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலை மத்திய அரசு எவ்வாறு கையாண்டிருக்கிறது என்பதற்கான பாராட்டாகவே தேர்தல் முடிவு அமைந்துள்ளது.
நாடு முழுவதும் இருக்கும் பெண்கள் அமைதியான வாக்காளர்கள். பாஜகவின் பணிகளைப் பார்த்து, கிராமங்கள், நகரங்களில் இருக்கும் பெண்கள் ஆதரவு அளித்துள்ளார்கள்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.