இந்தியா

கரோனா தடுப்பு மருந்தை அரசு எப்படி விநியோகிக்கும்?- காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் கேள்வி

செய்திப்பிரிவு

பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தை நாட்டின் கடைகோடி மக்களுக்கும் கொண்டு செல்ல அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பைசர் நிறுவனம் நம்பகமான கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி இருந்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முறையான உத்திகளை வகுக்க வேண்டியது அவசியம். எனவே அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது, எப்படி தடுப்பு மருந்தை மக்களிடம் கொண்டு சேர்க்கப் போகிறது என்று ட்விட்டர் பதிவில் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

காரணம், இந்த தடுப்பு மருந்து நல்ல பலனை அளிப்பதாக இருந்தாலும் இதை கொண்டு சேர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் பல்வேறு சவால்கள் இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிய நாடுகளில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் தடுப்பு மருந்தை குறிப்பிட்ட குளிர்நிலையில் பாதுகாப்பது அவசியம். எனவே முறையான சேமிப்பு மற்றும் போக்குவரத்து முறைகள் திட்டமிடப்பட வேண்டும்.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷணிடம் கேள்வி எழுப்பிய போது, ‘‘கரோனா பாதிப்பு ஆரம்பித்ததில் இருந்தே பைசர் உட்பட உள்நாடு மற்றும் வெளிநாட்டு தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் நிபுணர் குழு பேசி வருகிறது’’ என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT