பிஹார் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் கணக்குகள், கருத்துக் கணிப்புகள் எல்லாவற்றையும் பொய்யாக்கி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமாக 5 காரணங்கள் உள்ளன.
ஜாதி சமன்பாடு: ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் காங்கிரஸ் கட்சி ‘மகா கூட்டணி’யில் இணைந்தது. அதன்மூலம் யாதவர்கள் மற்றும் முஸ்லிம்கள் வாக்குகளுக்கு இலக்கு வைக்கப்பட்டது. அதேநேரத்தில் முதல்வர் நிதிஷ்குமாரின் குர்மிஸ் இனத்தவர்கள், மிகமிகப் பின்தங்கிய இனத்தவர்கள் மற்றும் உயர் ஜாதியினரின் (பாஜக) வாக்குகள், பொதுவாக இந்துக்களின் வாக்குகள் உறுதிப்படுத்தப்பட்டன.
பிஹாரின் சீமாஞ்சல் மற்றும் மிதிலாஞ்சல் பிராந்தியங்களில் முஸ்லிம்களின் வாக்குகளை ஆர்ஜேடி குறிவைத்தது. ஆனால், மோடியின் பிரச்சாரம் முஸ்லிம் வாக்குகள் அப்படியே தே.ஜ. கூட்டணி பக்கம் திரும்ப காரணமானது. கடந்த 2017-ம் ஆண்டு உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் நடைபெற்றது போலவே பிஹார் தேர்தலில் இப்போது நடந்துள்ளது.
வாக்கு வங்கி: பிஹாரில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு முதல்வர் நிதிஷ் அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியது. இதனால், ஏராளமான பெண்கள், இளைஞர்கள் இந்த முறை வாக்களித்தனர். கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் பதிவான வாக்குகள் முதல்வர் நிதிஷ் குமார் - பிரதமர் மோடி என இரண்டாக பிரிந்தன. இருவரும் தற்போது கைகோத்து தேர்தலை சந்தித்ததால், பெண்களின் வாக்குகள் கணிசமாக பாஜக - ஐஜத ஆகிய இரு கட்சிகளுக்கும் கிடைத்துள்ளன.
உருக்கமான பேச்சு: முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரின் உருக்கமான வேண்டுகோள்களும் வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கடைசி கட்ட தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பிரச்சாரத்தில், ‘‘இதுதான் எனது கடைசி தேர்தல்’’ என்று நிதிஷ் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்றொரு பக்கம் பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில், பிஹாரில் 15 ஆண்டுகளாக நடந்த காட்டு தர்பார் (லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோர் பதவி வகித்த காலம்) பற்றி மக்களுக்கு அடிக்கடி நினைவூட்டினார். இதனால் ஜாதி, இனம், அரசு நிர்வாகத்தில் குறை போன்றவற்றின் அடிப்படையில் வாக்களிப்பதை மக்கள் புறந்தள்ளியுள்ளனர்.
பல முனை போட்டிகள்: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான வாக்குகள், பல முனை போட்டிகளால் சிதறிவிட்டன. சிராக் பாஸ்வான் தனியாகப் போட்டியிட்டது, பப்பு யாதவின் ஜன் அதிகார் கட்சி, அசாதுதீன் ஓவைஸி, உபேந்திர குஷ்வாகா ஆகியோர் தனித்தனியாகப் போட்டியிட்டதால், தே.ஜ.வுக்கு எதிரான வாக்குகள் ஆங்காங்கே பிரிந்துவிட்டன.
மோடி, நிதிஷின் பணத் திட்டம்: கரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த பல பணப்பலன் திட்டங்கள் கைகொடுத்துள்ளன.
பெண்களின் ஜன் தன் வங்கிக் கணக்கில் கடந்த ஏப்ரல் மாதம் பணம் வரவு வைத்தது, சமையல் எரிவாயுவுக்காக பணம் அளித்தது, 3 மாதங்களுக்கு பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.500 செலுத்தியது போன்ற திட்டங்கள் தே.ஜ. கூட்டணிக்கு பெண்களின் ஆதரவு அதிகமாக கிடைத்துள்ளது.
அதேபோல் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒரு நாள் சம்பளம் ரூ.182-ல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டது. கரோனா வைரஸை எதிர்த்து போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தியது போன்ற மக்கள் நலப் பணிகள் பெரும் வாக்குகளைப் பெற்று தந்துள்ளன. இந்த 5 முக்கிய காரணங்களால் தேசிய ஜனநாயகக் கூட்டணி 4-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.