சிராக் பாஸ்வான் மரத்தின் மீது அமர்ந்து கிளையை வெட்டினார், கிளை முறிந்து விட்டது, ஆனால் அவரும் கீழே விழுந்து விட்டார் என இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி விமர்சித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே ஆளும் பாஜக கூட்டணிக்கும் ஆர்ஜேடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கூட்டணிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தன.
மொத்தமுள்ள 243 தொகுதி களில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக கூட்டணி 125 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத் துக் கொண்டது.
இதில் பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 4, விகாஸ்சீல் இன்சான் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
ஆர்ஜேடி கூட்டணிக்கு 110 இடங்கள் கிடைத்தன. அந்த கூட்டணியில் ஆர்ஜேடி 75, காங்கிரஸ் 19, சிபிஎம்-எம்எல் 12, இந்திய கம்யூனிஸ்ட் 2 , மார்க்சிஸ்ட் 2 இடங்களை பெற்றன.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிட்டது. லோக் ஜன சக்தி (எல்ஜேபி) ஓரிடத்தை மட்டுமே கைப்பற்றியது.
பாஜக - ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி கூறியதாவது:
‘‘மரத்தில் அமர்ந்து கொண்டு கிளையை வெட்டக்கூடாது என சொல்வார்கள். சிராக் பாஸ்வான் விஷயத்திலும் இது உண்மையாகி விட்டது. எந்த கூட்டணியில் இருக்கிறோமோ அந்த கூட்டணியை தோற்கடிக்கும் வேலையில் அவர் ஈடுபட்டார். முடிவு தெளிவாகி விட்டது. மரத்தின் கிளை முறிந்து விட்டது. ஆனால் அவரும் கீழே விழுந்த விட்டார்.’’ எனக் கூறினார்.