இந்தியா

உலகிற்கு ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பிஹார் கற்றுக் கொடுத்துள்ளது: பிரதமர் மோடி வெற்றி முழக்கம்

செய்திப்பிரிவு

பிஹார் தேர்தலில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமை தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.

நிதிஷ் குமார் 7வது முறையாக முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார். மகா கூட்டணி 110 இடங்களில் வென்றது.

நிதிஷ் குமாரின் ஜேடியு-வுக்கு தனிப்பட்ட முறையில் தோல்விதான் என்றாலும் தேஜகூவின் பலத்தில் அவர் மீண்டும் ஆட்சியமைக்கிறார்.

இந்நிலையில் பிஹார் வெற்றியை பெரிதும் எதிர்பார்த்த பிரதமர் மோடி தொடர் ட்வீட்களில் கூறியிருப்பதாவது:

உலகிற்கு ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பிஹார் மக்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஜனநாயகம் எப்படி வலுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பிஹார் உலகிற்கு எடுத்துரைத்துள்ளது.

நிறைய ஏழைகள், ஒன்றுமற்றவர்கள், பெண்கள் ஆகியோர் வாக்களித்து வளர்ச்சிக்கான தீர்மானமான தீர்ப்பை அளித்துள்ளார்கள். கிராமங்களில் உள்ள ஏழைகள், வியாபாரிகள், கடைக்காரர்கள் என்று சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் தேஜகூவின் மந்திரமான சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஷ்வாஸ் என்ற அனைவருக்குமான அனைவருடனுமான வளர்ச்சிக்காக வாக்களித்துள்ளனர்.

பிஹாரில் ஒவ்வொரு குடிமகனின் ஒவ்வொரு பகுதியின் சமச்சீரான வளர்ச்சியையும் உறுதி செய்கிறேன். இன்னும் முழுமையான அர்ப்பணிப்புடன் நாங்கள் உங்களுக்காகப் பணியாற்றுவோம்.

பிஹார் இளைஞர்கள் புதிய பத்தாண்டு தொடங்கிவிட்டதாக தெளிவுபடுத்தி விட்டார்கள். தற்சார்பு பிஹார் என்பதே அதன் வரைபடம். என்.டி.ஏவின் உறுதியை பிஹார் இளைஞர்கள் நம்பியிருக்கிறார்கள். இந்த இளம் ஆற்றல் முன்பை விடவும் எங்களைஅதிகம் பணியாற்ற அழைக்கிறது.

பிஹாரின் ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் ஆசை வளர்ச்சியே என்பதை தெளிவாக்கி விட்டனர். 15 ஆண்டுகளுக்குப் பிறகு என்.டி.ஏ அரசின் நல்லாட்சி பிஹாரின் கனவுகள் என்ன, பிஹாரின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை காட்டியுள்ளது, என்றார் மோடி.

ஆர்ஜேடி 75 இடங்களையும் பாஜக 72 இடங்களையும் தனிப்பட்ட முறையில் கைப்பற்றின. ஐக்கிய ஜனதாதளம் 42 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரச் 19 இடங்களிலும் சிபிஐ - எம்.எல். 12 இடங்களிலும் வென்றுள்ளது. எல்ஜேபி ஒரு இடத்தில் வென்றது.

SCROLL FOR NEXT