பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, லேப்டாப், டிவி, ஸ்கூட்டர் உட்பட பல்வேறு இலவசங்களை அறிவித்துள்ள பாஜக, ஸ்கூட்டருக்கான பெட்ரோல் 2 ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என நேற்று தெரிவித்தது.
பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த வியாழக்கிழமை வெளியிட்டார். இதில் பல்வேறு இலவச அறிவிப்புகள் இடம்பெற்றுள்ள போதிலும், மாணவிகளுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதற்கிடையே, “மாணவி களுக்கு ஸ்கூட்டியை இலவச மாக வழங்கினால் அதற்கான பெட்ரோலை யார் வழங்குவது” என கிண்டலாக கேள்வி எழுப்பி இருந்தார் மாநில முதல்வர் நிதிஷ் குமார்.
இதுகுறித்து, முன்னாள் துணை முதல்வரும் பாஜக முதல்வர் வேட்பாளராக கருதப் படுபவருமான சுஷில் குமார் மோடி பாட்னாவில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
பிஹாரில் பஜாக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறும் 5,000 மாணவிகளுக்கு இருசக்கர வாகனத்துடன் (ஸ்கூட்டி) 2 ஆண்டுகளுக்கு பெட்ரோலும் இலவசமாக வழங்கப்படும். இதுபற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை.
மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தினருக்கு சமையல் எரிவாயு இணைப்பு, வண்ண தொலைக்காட்சி மாணவர்களுக்கு லேப்டாப் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
நிதிஷ் குமார் ஆட்சியில் அரசு மருத்துவமனைகளுக்கு தரம் குறைந்த மருந்துகளை அதிக விலைக்கு வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான இந்த மருந்து ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.