பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லீமின் கட்சி (ஏஐஎம்ஐஎம்) 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
பிஹாரில் 2015-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்முதன்முதலாக போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம், அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்து டெபாசிட் இழந்தது. இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் களம்கண்ட அக்கட்சி, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. இதனால் உற்சாகமடைந்த அதன் தலைவர்அசாதுதீன் ஒவைசி, பிஹாரில்தனது கட்சியை வலிமைப்படுத்த தொடங்கினார். மாவட்டங்கள்தோறும் நிர்வாகிகள் நியமனம், அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் என அக்கட்சி பிரபலமடைய தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஏஐஎம்ஐஎம் கட்சி பகுஜன்சமாஜ், முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹாதலைமையிலான ராஷ்ட்ரிய லோக் சமதா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மொத்தம் 24 தொகுதிகளில் இக்கூட்டணி தங்கள்வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இதில், ஏஐஎம்ஐஎம் மட்டும் சீமாஞ்சல் பிராந்தியத்தில் 14 தொகுதிகளில் களம் கண்டது. இதில் 5 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் வெற்றி பெற்றிருக்கிறது.