பிரதிநிதித்துவப் படம். 
இந்தியா

பிஹாரில் இடதுசாரிகள் எழுச்சி: 29 தொகுதிகளில் 17 இடங்களில் முன்னிலை

பிடிஐ

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இடதுசாரிகள் குறிப்பிடத்தகுந்த அளவு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளனர். 29 இடங்களில் போட்டியிட்ட இடதுசாரிகள் 16 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.

பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைமையில் மகா கூட்டணியில் இடதுசாரிகள் போட்டியிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் (எம்எல்) ஆகியவை போட்டியி்ட்டன.

இந்த 3 இடதுசாரிகள் கட்சிக்கும் சேர்த்து மகா கூட்டணியில் 29 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 இடங்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சிக்கு 19 இடங்களும் ஒதுக்கப்பட்டன.

இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சி 19 இடங்களில் போட்டியிட்டு 12 இடங்களில் முன்னணியில் இருக்கிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சி 3 இடங்களில் வென்றது. மார்க்சிஸ்ட் கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.

தற்போது வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருப்பது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சியின் பொதுச் செயலாளர் திபான்கர் பட்டாச்சார்யா கூறுகையில், “இந்த முன்னிலையை நாங்கள் எதிர்பார்த்தோம். இந்த முறை அதிகமான இடங்களில் வெல்வோம் என நம்புகிறோம். இது வித்தியாசமான தேர்தலாக இருக்கிறது. மக்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்.

எங்கள் கட்சியில் இளம் வேட்பாளர்களையும், மாணவர்கள் தலைவர்களையும், விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்களையும், தொழிலாளர்களையும் களமிறக்கியிருக்கிறோம். அது நன்றாகக் களத்தில் வேலை செய்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.

பிஹாரில் ஏகியான், அர்ரா, அர்வால், பல்ராம்பூர், பிப்பூதிபூர், தாராலி, தரருன்டா, தும்ரான், கோஸி, காராகட், மன்ஜி, மதிஹானி, பாலிகாஞ்ச், தராரி, ஜிராதி, பச்சாவரா, பக்ரி உள்ளிட்ட தொகுதிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) போட்டியிட்டது.

SCROLL FOR NEXT