ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் ஆளுயர சிலையை, இம்மாதம் 12-ம் தேதியன்று மாலை ஆறரை மணி அளவில், காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். மத்திய கல்வி அமைச்சரும் இந்த நிகழ்வில் பங்கேற்கிறார்.
சுவாமி விவேகானந்தரின் தத்துவமும், லட்சியமும் நம் நாட்டு இளைஞர்களுக்கு இன்றைக்கும் வழிகாட்டுகிறது. உலகெங்கும் லட்சக்கணக்கானோருக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் மிக உயர்ந்த ஆளுமையைப் பெற்றதற்காக இந்தியா பெருமை கொள்கிறது.
சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலத்தைப் போலவே இன்றைய காலகட்டத்துக்கும் அவரது லட்சியங்கள் பொருத்தமாக இருப்பதாக பிரதமர் எப்போதும் கூறுவார். மக்களுக்கு சேவையாற்றுவதும், நாட்டின் இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதும், தேசத்தை அனைத்து விதங்களிலும் வலுப்படுத்தி, சர்வதேச அளவில் அதன் மதிப்பை உயர்த்தும் என்று பிரதமர் அடிக்கடி வலியுறுத்துவார். இந்தியாவின் வளமும், சக்தியும் அதன் மக்களிடம் இருப்பதால், அனைவருக்கும் அதிகாரமளிப்பது மட்டுமே தற்சார்பு இந்தியா என்னும் உயர்ந்த லட்சியத்தை எட்டுவதற்கு நாட்டை இட்டுச் செல்லும்.