பிஹாரில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கடைசி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 129 இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பான்மை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
ஆர்ஜேடி தலைமை மெகாக் கூட்டணி 102 இடங்களில் வென்றுள்ளது. இதில் என்.டி.ஏ.வில் பாஜக மட்டும் 74 இடங்களில் முன்னிலை வகிக்க நிதிஷ் குமாரின் ஜேடியு 48 இடங்களிலும் பாஜக ஆதரவு லோக்ஜனசக்தி 2 இடங்களிலும் மற்றவை 10 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றனர்.
இதில் தானாபூரில் தான் எதிர்த்து நிற்கும் பாஜக வேட்பாளரின் கணவரை 2003-ல் கொலை செய்த குற்றவாளிகள் பட்டியலில் முதன்மை வகிக்கும் ஆர்ஜேடி கட்சியின் வேட்பாளர் ரீத்திலால் யாதவ் முன்னிலை வகிக்கிறார்.
இந்தத் தானாப்பூர் தொகுதியில் ரீத்திலால் சிக்கியிருக்கும் கொலையில் கொலையுண்ட முன்னாள் பாஜக தலைவரான சத்யநாராயணன் சின்ஹாவின் மனைவி ஆஷா சிங் பாஜக டிக்கெட்டில் கடந்த 3 முறை தொடர்ச்சியாக வென்று சாதனை புரிந்துள்ளார்.
ஆனால் இப்போது ரீத்திலால் இந்தத் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். ரீத்திலால் பாட்னா சிறையிலிருந்து ஆகஸ்டில்தான் ஜாமீனில் வெளிவந்தார். இதில் பாஜக வேட்பாளரை வீழ்த்தும் நிலையில் ரீத்திலால் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அதே போல் மொகாமா தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளர் ஆனந்த்குமார் சிங் 51% வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார், இவர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் மீது கொலை உட்பட 38 கிரிமினல் வழக்குகள் உள்ளன.
இவர் 2015-ல் சுயேச்சையாக நின்று இதே தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.