இந்தியா

பிஹார் தேர்தல்: தோல்வியை ஒப்புக் கொண்ட ஐக்கிய ஜனதாதளம், ஆனாலும் துருப்புச் சீட்டாகும் நிதிஷ் குமார்

செய்திப்பிரிவு

பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது, இதில் தொடக்கத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதள,காங்கிரஸ், இடதுசாரிக் கூட்டணியான மகாக்கூட்டணி முன்னிலை வகித்தது. ஆனால் தற்போது பாஜக தலைமை தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.

கடைசியாகக் கிடைத்த முன்னிலை நிலவரங்களில் தேஜகூ 124 இடங்களிலும் ஆர்ஜேடி தலைமை மகாக்கூட்டணி 102 இடங்களிலும் லோக் ஜனசக்தி 7 இடங்களிலும் மற்றவை 9 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன.

122 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். இதில் நிதிஷ் குமார் என்ன முடிவெடுப்பார் என்பது இப்போது அங்கு பெரிய அரசியல் முடிச்சாக விழுந்துள்ளது.

இதில் பாஜக தலைமை தேஜகூவில் உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 49 இடங்களில் முன்னிலை பெற பாஜக தனித்து 71 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

எனவே இப்போது நிதிஷ் குமார்தான் மீண்டும் துருப்புச் சீட்டாகத் திகழ்கிறார். தன்னை முதல்வராக்காவிட்டால் நிச்சயம் அவர் என்ன செய்வார் என்பது யாருக்கும் தெரியாது, ஆர்ஜேடியை ஆதரிக்கலாம் அப்படி ஆதரித்தால் பாஜக ஆட்சி அங்கு அமைவது கடினம். இல்லையெனில் நிதிஷ் குமார் கட்சியிலேயே உட்கட்சி அதிருப்தி ஏற்பட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பிளவுண்டு ஆர்ஜெடிக்கும் செல்லலாம் அல்லது பாஜகவுக்கும் செல்லலாம் இதில் பணபலம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட மகாராஷ்டிரா போல் சூழ்நிலை பிஹாரில் உள்ளது, சிராகுடன் கூட்டணியை பாஜக உறுதி செய்தால் நிச்சயம் நிதிஷ் குமார் ஆதரவு என்.டி.ஏ.வுக்கு இருக்குமா என்பது ஐயமே.

இந்நிலையில் ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி, ஜேடிஎஸ் கட்சியின் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

‘பிராண்ட் நிதிஷ்’ நன்றாக உள்ளது, ஆனால் கரோனா வைரஸ், பொருளாதாரச் சரிவு, ஆகியவை எதிராகப் போய்விட்டது என்றார்.

சிராக் பாஸ்வான் மீது விமர்சனம் வைத்த கே.சி தியாகி, பாஜக, சிராக் பாஸ்வானுக்கு நிதிஷை தாக்கிப் பேச ரகசிய சலுகை அளித்தது என்றார். அவரும் நிதிஷ் காலம் முடிந்து விட்டது, பழைய ஆள், அவர் ஒரு சுமை என்றெல்லாம் பேசினார்.

சிராக் பாஸ்வானை முதலிலேயே அடக்கியிருக்க வேண்டும், ஆனால் பாஜக அவருக்கு நிதிஷை விமர்சிக்க ரகசிய சலுகை அளித்தது, என்றார் கே.சி.தியாகி.

SCROLL FOR NEXT