ஜோர்டான், பாலஸ்தீனம், இஸ் ரேல் ஆகிய 3 நாடுகளில் 6 நாள் பயணமாக நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது பயணத்தின் முதல்கட்டமாக ஜோர்டான் சென்றடைந்தார்.
தலைநகர் அம்மான் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக அல் ஹசைனி அரண்மனைக்கு சென்ற குடியரசுத் தலைவருக்கு அங்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரு நாடுகளின் பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, மன்னர் அப்துல்லா வுடன் பிரணாப் சுமார் அரை மணி நேரம் பேசினார். இதையடுத்து பிரணாபுக்கு அப்துல்லா விருந்தளித்தார்.
இராக்கின் மொசூல் நகரில் 39 இந்தியர்கள் ஐ.எஸ். தீவிர வாதிகளின் பிடியில் உள்ளனர். இவர்களை விடுவிக்க உதவும்படி அப்துல்லாவிடம் மீண்டும் வலி யுறுத்தப்படும் என்று தெரிகிறது. மேலும் இருதரப்பு உறவுகள், பிராந்திய, சர்வதேச விவகாரங் களில் பிரணாப் விரிவான பேச்சு நடத்தவுள்ளார்.
ஜோர்டானில் 2 நாள் பயணத்துக்குப் பிறகு பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு பிரணாப் செல்கிறார். பிரணாப் தனது 3 நாடுகள் பயணத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் என்று கூறியுள்ளார்.
முதல்முறை பயணம்
ஜோர்டானுடன் தூதரக உறவு ஏற்பட்ட கடந்த 65 ஆண்டுகளில், அந்நாட்டுக்கு செல்லும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் பிரணாப் ஆவார்.
குடியரசுத் தலைவருடன் மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட், காங்கிரஸ் கட்சியின் கே.வி. தாமஸ், பாஜகவின் மீனாட்சி லெகி உள்ளிட்ட 6 எம்பிக்களும் சென்றுள்ளனர்.