இந்தியா

பிஹார் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கிறது: லாலு, பாஸ்வான் மகன்களுக்கிடையே வார்த்தைப் போர்

ஐஏஎன்எஸ்

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் லோக் ஜன சக்தி கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோரைத் தொடர்ந்து அவர்களது மகன்கள் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர்.

பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் சிங் மற்றும் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில், தேஜஸ்வியைவிட (26) தேஜ் பிரதாப்பின் (25) வயது குறைவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாஸ்வான் மகன் சிராக் கூறும்போது, “பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. காட்டாட்சி போல் நடைபெற்ற அந்தக் காலத்தில், லாலு பிரசாத் மகன்கள், விருப்பம் போல தங்கள் பிறந்த தேதியை பதிவு செய்து கொண்டனர். இதனால் அவர்களில் யார் மூத்தவர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது” என குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு தேஜஸ்வி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் நேற்று கூறும்போது, “சிராக் பாஸ்வான் எங்கள் மீது குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, அவரது தந்தை ராம் விலாஸ் பாஸ்வானின் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள அவரது மனைவியின் பெயரை முதலில் வெளியிட வேண்டும்” என்றார்.

முன்னதாக, ராம் விலாஸ் பாஸ்வான் கூறும்போது, “முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் ‘காலாவதியான மருந்து’ போன்றவர். சமூகத்தினரின் ஆதரவை அவர் இழந்துவிட்டார்” என்றார்.

பாஸ்வானைப் பற்றி லாலு கூறும்போது, “அதிகாரத்தை அனுபவிப்பதற்காக சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாஸ்வான் அணி மாறிவிடுவார்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT