இந்தியா

தீபாவளிக்கு உள்ளூர் தயாரிப்புகளையே வாங்குங்கள்: மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

பிடிஐ

இந்தத் தீபாவளிக்கு உள்ளூர் தயாரிப்புகளையே வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு 614 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

காணொலிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

''மக்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துகள். தீபாவளிப் பண்டிகைக்காகச் செலவழிக்கும் நேரத்தில், நாம் உள்ளூர் பொருளை வாங்கி ஊக்குவிக்க வேண்டும். இதனை வாரணாசி மக்களிடமும், நம் நாட்டின் அனைத்து மக்களிடமும் சொல்ல விரும்புகிறேன்.

ஒவ்வொரு நபரும் உள்ளூர் தயாரிப்புகளைப் பெருமையுடன் வாங்கும்போது, உள்ளூர் தயாரிப்புகளைப் பற்றிப் பேசலாம். அவற்றைப் பாராட்டலாம். எங்கள் உள்ளூர் தயாரிப்புகள் மிகவும் சிறப்பானவை என்ற செய்தியை மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்லலாம். இந்தச் செய்தி வெகுதூரம் செல்லும்.

உள்ளூர் அடையாளம் பலப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், இந்த உள்ளூர் தயாரிப்புகளை உருவாக்கும் நபர்களின் தீபாவளியும் மேலும் பிரகாசமாக இருக்கும்.

உள்ளூர் பொருளை வாங்குவது என்பது அகல் விளக்குகளை மட்டும் வாங்குவதை அர்த்தப்படுத்துவதில்லை. தீபாவளியில் நீங்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களையும் இது குறிக்கிறது. இது உள்ளூர் பொருளை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும்.

தீபாவளிக்கான உள்ளூர் குரல் (vocal for local) என்பது உள்ளூர் மந்திரமாகவே இப்போது எல்லா இடங்களிலும் எதிரொலிக்கிறது என்பதை நீங்கள் இன்று காண்கிறீர்கள். எனவே, உள்ளூர் பொருள்களோடு தீபாவளியைக் கொண்டாடுவது பொருளாதாரத்திற்குப் புதிய ஊக்கத்தை அளிக்கும்''.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT