இந்தியா

வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளை நேரடியாக சந்தையுடன் இணைக்கும்; இடைத்தரகர்களை வெளியேற்றும்: பிரதமர் மோடி பேச்சு

பிடிஐ

மத்திய அரசு அறிமுகப்படுத்திய வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளை நேரடியாகச் சந்தையுடன் இணைக்கும் என்றும், இடைத்தரகர்களை வெளியேற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு 614 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.

காணொலிக் காட்சி வாயிலாக இன்று பல்வேறு திட்டங்களைத் தொடங்கி பிரதமர் மோடி, போஜ்புரி மொழியில் ''ஹர் ஹர் மகாதேவ்'' என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.

இதில் பிரதமர் பேசியதாவது:

''வாரணாசியில் பல்வேறு திட்டங்கள் இன்று தொடங்கப்படுகின்றன. அதில் முக்கியமானது சுவாமித்வா திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்குச் சொத்து அட்டைகள் வழங்கப்படும். இது அவர்கள் கடன் பெற உதவுவது மட்டுமல்லாமல், அவர்களின் சொத்துகளைப் பறிக்கும் விளையாட்டும் முடிவுக்கு வரும்.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளை நேரடியாகச் சந்தையுடன் இணைக்கும். வேளாண் சீர்திருத்தச் சட்டம் இடைத்தரகர்களை வெளியேற்றும். பூர்வஞ்சலின் (கிழக்கு உத்தரப் பிரதேசம்) விவசாயிகளும் இதன் மூலம் பயனடைவார்கள்.

வாரணாசி அனைத்துத் துறைகளிலும் அனைத்து வகையான வளர்ச்சியையும் கண்டுள்ளது. இது நகரத்திற்கு ஒரு புதிய அடையாளத்தை அளிக்கிறது. வாரணாசியின் வளர்ச்சி என்பது பூர்வஞ்சல் பகுதிவாழ் மக்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் உதவுகிறது. இப்போது அவர்கள் இனி டெல்லி வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

கரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடுவதில் வாரணாசி மக்களின் சமூக ஒற்றுமையை நான் பாராட்டுகிறேன். அதேநேரம் பூர்வஞ்சல் விவசாயிகளையும் நான் பாராட்டுகிறேன். நோய்த்தொற்று காலங்களிலும்கூட, அவர்கள் தங்கள் வயல்களில் கடுமையாக உழைத்து, நல்ல விளைச்சலைக் காண்கிறார்கள்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT