அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி 1927ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பிரிக்கப்படாத இந்தியாவில் கராச்சியில் பிறந்தார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் இந்தியாவுக்கு வந்தது.
அத்வானி நேற்று தன் 93-வது பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடினார். இதில் பிரதமர் மோடி அத்வானியின் இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் அத்வானியை அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்தினர்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக தொண்டர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் அத்வானி 'வாழும் உத்வேகம்' என்று புகழாரம் சூட்டினார்.
இந்நிலையில் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் டி.எச்.சங்கரமூர்த்தி கூறியுள்ளதாவது:
"உங்களுக்குத் தெரியும். லால் கிருஷ்ணா அத்வானி கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருபவர். ஆர்எஸ்எஸ், பாரதிய ஜன சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றின் மூலம் தாய்நாட்டுக்காக அவர் செய்த சேவை, தியாகம் மற்றும் பங்களிப்பு ஒரு தனித்துவமான விஷயம்.
அவரது தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் கறைபடியாமலும் நேர்மையாகவும், மிகவும் நம்பகத்தன்மை கொண்ட ஒரு தலைவராகவும் விளங்குகிறார். ஒரு தலைவராக தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஏராளமான அறிவும் அனுபவமும் கொண்டவர். நாம் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளக்கூடிய அத்தகைய ஓர் உயர்ந்த மனிதராக அத்வானி திகழ்கிறார்.
அத்வானிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் குறிப்பாக ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களின் தீவிர விருப்பமாகும். அவர் எல்லா வகையிலும் சிறந்தவர், சரியானவர், புகழ்பெற்றவர். கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் சார்பாக, அத்வானிக்கு பாரத ரத்னா விருதை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு டி.எச்.சங்கரமூர்த்தி தெரிவித்துள்ளார்.