லக்னோ: உ.பி.யின் பதாவுன் மாவட்டம், கர்ஹவுனா என்ற கிராமத்தில் திருமணத்துக்கு முந்தைய சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக 9 பெண்கள் நேற்று காலை இ-ரிக்ஷாவில் சென்றுள்ளனர்.
இ-ரிக்ஷா ஓட்டுநர் ஒரு டிராக்டர் மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது, எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு டிராக்டர் மீது இ-ரிக்ஷா மோதியது. தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 6 பெண்கள் உயிரிழந்தனர்.
மேலும் பெண்கள் 2 பேர், இ-ரிக்ஷா ஓட்டுநர் காயம் அடைந்தனர். மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக இரு டிராக்டர்களின் ஓட்டுநர்களைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலக ‘எக்ஸ்' தளத்தில், "உ.பி.யில் நிகழ்ந்த விபத்தில் உயிர்கள் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என பதிவிடப்பட்டுள்ளது.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படு வதை உறுதி செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.