புதுடெல்லி: பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இந்திய மாலுமிகள் 6 பேர் கடந்த 7 மாதங்களாக சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்கக்கோரி மத்திய அரசுக்கு அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரானை தளமாகக் கொண்ட கெவர் ஷிப்பிங் நிறுவனத்தின் கப்பல் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கு சென்றது. கப்பல் நிறுவனத்துக்கும் துறைமுக அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து கப்பல் தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கப்பலில் இந்திய மாலுமிகள் 6 பேர் இருப்பதாகவும், கடந்த 7 மாதங்களாக அங்கு அவர்கள் தவித்து வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
மாலுமிகளின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கப்பலுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களுடனான தொடர்பு கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கராச்சி துறைமுகத்தில் சிக்கி தவிக்கும் இந்திய மாலுமிகளில் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜைச் சேர்ந்த வணிகக் கப்பற்படையின் தலைமை அதிகாரியான வினீத் கிஷோர் மிஸ்ராவும் ஒருவர்.
அவரது குடும்பத்தினர் மிஸ்ரா உள்பட 6 இந்திய மாலுமிகளையும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கக் கோரி பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு கடிதம் எழுதினர். தூதரகம் சார்பில் உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், 7 மாதங்கள் ஆகியும் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.
இதனையடுத்து, இந்த விவகாரத்தில் தலையிட்டு 6 இந்தியர்களும் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதிசெய்யுமாறு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சகத்திடம் மிஸ்ராவின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், இப்பிரச்சினையை மத்திய அரசின் கவனத்துக்கு விரைவாக கொண்டு செல்ல, தங்களது உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மூலமாகவும் அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.