நவிமும்பை: கட்டிட உள் அலங்கார வடிவமைப்பாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பான வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனல் எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக அலிபாக்கில் தற்காலிக சிறையாக மாற்றப்பட்டுள்ள பள்ளி ஒன்றில் தனிமை முகாமில் அர்னாப் சிறை வைக்கப்பட்டார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அவர் செல்போன் பயன்படுத்தியது போலீஸாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலையில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து தலோஜா சிறைக்கு அர்னாப் கோஸ்வாமி மாற்றப்பட்டார்.
இதுபற்றி விசாரணை அதிகாரியான குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜமீல் ஷேக் கூறும்போது, ‘‘அர்னாபை கைது செய்தபோது அவரது செல்போனை பறிமுதல் செய்தோம். ஆனால் தனிமை முகாமில் அவர் செல்போன் பயன்படுத்தியது தெரியவந்ததைத் தொடர்ந்து தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். முகாமில் அவருக்கு செல்போன் கிடைத்தது எப்படி, அவருக்கு செல்போன் கொடுத்தது யார் என்று விசாரணை அறிக்கை அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது’’ என்றார்.