ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி : கோப்புப் படம். 
இந்தியா

அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு: மும்பை உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது

பிடிஐ

உள்ளரங்கு வடிவமைப்பாளரைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ரிபப்ளிக் சேனலின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றம் நாளை (திங்கள்கிழமை) உத்தரவு பிறப்பிக்கிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு உள்ளரங்கு வடிவமைப்பாளர் ஒருவர் செய்த பணிகளுக்குப் பணம் தராமல் ரிபப்ளிக் சேனல் இழுத்தடித்ததால் அவர் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். ஆனால், அந்தக் காலகட்டத்தில் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்ததால், அந்த வழக்கு முடிக்கப்பட்டது.

ஆனால், சமீபத்தில் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்த வழக்கின் விசாரணையில் உள்ளரங்கு வடிவமைப்பாளரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் போலீஸார் கடந்த வாரம் புதன்கிழமை கைது செய்தனர்.

தற்போது அர்னாப் கோஸ்வாமி வரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி, கைதான மற்ற இருவரான பெரோஷ் ஷேக், நிதிஷ் ஷர்தா தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, எம்எஸ் கார்னிக் அமர்வில் நேற்று முழுவதும் விசாரிக்கப்பட்ட நிலையில் எந்த முடிவும் எடுக்காமல் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மீதான உத்தரவு திங்கள்கிழமை பிற்பகல் (9-ம்தேதி) 3 மணிக்கு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT