பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய பல கணிப்புகள் மெகா கூட்டணிக்குச் சாதகமாக வெளியாகியுள்ளன. இதன்படி ஆட்சி அமைந்தால் துணை முதல்வர் பதவியைப் பெறக் காங்கிரஸ் திட்டமிடுகிறது.
நேற்றுடன் முடிந்த 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் மீதான தேர்தல் கணிப்புகளில் லாலுவின் மகனான தேஜஸ்வீ பிரசாத் யாதவிற்கு முதல்வராகும் வாய்ப்பிருப்பதாகவும் சில கருத்துக் கணிப்புகள் குறிப்பிட்டுள்ளன.
இந்தத் தேர்தலின் முக்கியப் போட்டியாளர்களாக ஆளும் தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஏ), மெகா கூட்டணி உள்ளது. மெகா கூட்டணிக்கு லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமை வகித்தது. மெகா கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டது. இதற்கு 30 முதல் 40 தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணிப்பு உண்மையானால், பிஹாரில் அமையும் மெகா கூட்டணியில் காங்கிரஸின் முக்கிய ஆதரவு இருக்கும். எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி துணை முதல்வர் பதவியைக் கோரக் காங்கிரஸ் திட்டமிடுகிறது.
பிஹார் தேர்தலில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எட்டுப் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார். இவருடன் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வீயும் இருந்தார். இதற்கு முன்பும் காங்கிரஸ் ஆதரவில் ஆர்ஜேடி, பிஹாரில் ஆட்சி அமைத்திருந்தது. அப்போது காங்கிரஸுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
எனினும், தற்போதைய சூழலில் துணை முதல்வர் பதவியைக் கோர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக ராகுல் காந்தி தனது கட்சியின் பிஹார் மாநிலத் தலைவர்களுடன் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.