வெள்ள நிவாரணத்தில் மத்திய அரசு ஒரு ரூபாய்கூட நிதி உதவி வழங்கவில்லை என்றும், வெற்று வாக்குறுதிகள் அளித்ததாகவும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 'சமீபத்திய மழை மற்றும் வெள்ளத்திற்கு மத்திய அரசின் உதவி' என்ற தலைப்பு தொடர்பாக மறு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில உயரதிகாரிகள் கலந்துகொண்டு முதல்வருடன் கலந்துரையாடினர்.
இதுகுறித்து தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''முதல்வர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நிதித்துறை அதிகாரிகள் தெலங்கானா மழை வெள்ள பாதிப்புகள் குறித்துக் கலந்துரையாடினர். அண்மையில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசிடமிருந்து பெறப்படவில்லை என்ற தகவலை அப்போது முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்தில் மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மாநிலங்களில், குறிப்பாக ஹைதராபாத் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது பல துறைகளில் இழப்புகளுக்கு வழிவகுத்தது. மாநிலம் முழுவதும் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் விளைவாக ரூ.5,000 கோடி இழப்பு இருப்பதாக ஆரம்பக்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
முதல்வர் சந்திரசேகர் ராவ், அக்டோபர் 15 அன்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் செய்யப்பட்ட முதன்மை மதிப்பீடுகளின்படி ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு என்பதைச் சுட்டிக்காட்டி, உடனடி நிவாரணமாக 1,350 கோடி ரூபாய் கோரியதையும் கூட்டத்தின்போது அதிகாரிகள் நினைவுபடுத்தினர்.
இத்தனைக்கும் பிறகு, மத்திய அரசிடமிருந்து சில உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் இன்றைய நாள்வரை ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்''.
இவ்வாறு தெலங்கானா முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெற்று வாக்குறுதிகள்: சந்திரசேகர் ராவ் குற்றச்சாட்டு
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறுகையில், ''தெலங்கானாவில் பலத்த மழை மற்றும் வெள்ளம் குறித்து குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். அவர்கள் என்னுடன் பேசி தனிப்பட்ட முறையில் நிலைமை குறித்து விசாரித்தனர்.
மத்தியக் குழுவும் மாநிலத்திற்கு வருகை தந்து நிலைமையை மதிப்பீடு செய்தது. ஆனால், நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்த மத்திய அரசு அவ்வாறு எதுவும் செய்யவில்லை.
மத்திய அரசு வெற்று வாக்குறுதிகளை அளிக்கிறது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்கள் மாநிலத்தில் வெள்ள நிவாரணத்திற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் மாநிலத்தால் பெரும் இழப்புகள் ஏற்பட்ட போதிலும், இந்த விஷயத்தில் ஒரு ரூபாயைக் கூட உதவியாக வழங்கத் தவறிய மத்திய அரசின் அணுகுமுறை அம்பலமாகியுள்ளது.
ஹைதராபாத் போன்ற ஒரு நகரம் பெரும் இழப்பைச் சந்தித்தபோதும் மத்திய அரசு உதவிக்கரம் நீட்டவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது" என்று தெரிவித்தார்.